திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பிரமாண்ட அத்தப்பூக்கோலம்
திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பிரமாண்ட அத்தப்பூக்கோலம்
ADDED : ஆக 26, 2025 11:36 PM

பாலக்காடு; கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை, வரும் செப்., 4, 5, 6 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அத்தம் நாளான நேற்று முதல், 10 நாட்கள் பூக்கோலம் போடுவது வழக்கம்.
இந்நிலையில், திருச் சூரில் உள்ள பிரசித்தி பெற்ற வடக்குநாதர் கோவிலில், தெற்கு கோபுரம் 'மாலை கூட்டமைப்பு' சார்பில் பிரமாண்ட அத்தப்பூக்கோலம் போடப்பட்டுள்ளது. இதை ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இந்த அமைப்பின் தலைமையிலான, 200க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, 60 அடி அகலத்தில், இரண்டாயிரம் கிலோ மலர்களால், இக்கோலத்தை அமைத்தனர். செண்டு மல்லி, வாடா மல்லி, சாமந்தி ஆகிய பூக்களால் அலங்கரித்து, வண்ணப்பொலிவு ஏற்படுத்தப்பட்டது.
இந்த பூக்கோலம் முன்பாக, 'செல்பி' எடுக்கவும், கண்டு மகிழவும், காலை முதல் மக்கள் திரண்டிருந்தனர். இந்த அமைப்பு கடந்த, 18 ஆண்டுகளாக, தொடர்ந்து அத்தப்பூக்கோலமிடுவதை கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.