ADDED : ஜன 19, 2025 04:16 PM

சண்டிகர்: விவசாயிகள் சங்க தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால் மருத்துவ உதவியை ஏற்றுக்கொண்டதால், கானவுரி எல்லையில் 121 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.
மத்திய அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடன்படாததால், ஜனவரி 15ம் தேதி டல்லேவாலின் சாகும் வரை உண்ணாவிரதத்தில் 111 விவசாயிகள் கலந்து கொண்டனர். அனைவரும் கானவுரி அருகே ஹரியானா மாநில எல்லை அருகே போராட்டத்தில் அமர்ந்தனர். ஜனவரி 17ம் தேதி, ஹரியானாவைச் சேர்ந்த மேலும் 10 விவசாயிகள் அவர்களுடன் இணைந்தனர்.
இந்நிலையில் மத்திய வேளாண் அமைச்சக இணைச் செயலாளர் பிரியா ரஞ்சன் தலைமையிலான உயர்மட்ட மத்தியக் குழு, விவசாயி தலைவர் டல்லேவால் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா பிரதிநிதிகளைச் சந்தித்து, பிப்ரவரி 14 அன்று சண்டிகரில் மீண்டும் பேச்சு நடத்த அழைப்பு விடுத்தது.
இதையடுத்து டல்லேவால் மருத்துவ உதவியைப் பெற நேற்று ஒப்புக்கொண்டார். அவர் மருத்துவ உதவியை பெற ஒப்புக்கொண்ட நிலையில், அவருடன் இணைந்து சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய 121 விவசாயிகளும் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

