ADDED : ஜூன் 11, 2024 08:15 PM
ஜெய்த்பூர்: மனைவி செய்த துரோகத்தால் 'கேங்ஸ்டராக' மாறிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, லாரன்ஸ் பிஷ்னோய் என்ற பிரபல ரவுடியின் கூட்டாளி ராஜன் சிங் வீட்டுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இந்த விபத்தில் ராஜன் சிங் படுகாயமடைந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர்.
பல மாத தேடுதலுக்குப் பின் இந்த வழக்கில், ஜெய்த்பூரைச் சேர்ந்த ஆகாஷ் பைடா, 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ஆகாஷ் பைடா மனைவிக்கும் ராஜன் சிங்கிற்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதை கண்ணால் பார்த்த ஆகாஷ், ராஜன் சிங்கை கொலை செய்வதற்காக வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.
அதன் பின், ஆகாஷ் வாழ்க்கை மாறியது. சிறையில் இருந்து வெளியே வந்த பழைய குற்றவாளிகளுடன் இணைந்து 'கேங்ஸ்டராக' மாறியுள்ளார். டில்லி முழுவதும் கொள்ளை, மிரட்டி பணம் பறிக்கும் 'நெட்ஒர்க்கை' ஏற்படுத்திக் கொண்டார்.
அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் அமன், அஜித், கரண். இந்த கும்பலுக்கு தெற்கு, தென்கிழக்கு டில்லி பகுதிகளில் கொள்ளை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமன், அஜித், கரண் ஆகிய மூவரும் பழைய குற்றவாளிகள். இவர்கள் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள். இவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.