பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சல் படையின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை
பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சல் படையின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை
ADDED : நவ 19, 2025 03:53 AM

ராய்ப்பூர்: ஆந்திரா - சத்தீஸ்கர் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், தேடப்பட்ட நக்சல் அமைப்பின் முக்கிய தலைவரும், பாதுகாப்பு படையினர் மீது, 26 முறை கொடூர தாக்குதல் நடத்தியவருமான மத்வி ஹித்மா, 43, அவரது மனைவி உட்பட ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
க டந்த சில மாதங்களாக நாடு முழுதும் உள்ள நக்சல்களை ஒழிக்கும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிர ரோந்து இந்நிலையில், ஆந்திரா - சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆந்திராவில் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தின் மாரேடுமில்லி வனப்பகுதியில் ஆந்திர, சத்தீஸ்கர் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், ஆறு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில், 50 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பின் தலைவரும், மத்திய குழு உறுப்பினருமான மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே மற்றும் நான்கு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ம த்வி ஹித்மா சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம் நக்சல் அமைப்பு பலவீனமடைந்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள், 'சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி' எனவும் குறிப்பிடுகின்றனர்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது மனைவி ராஜேவும், மத்வி ஹித்மா உடன் இணைந்து பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சத்தீஸ்கரிலும் வேட்டை ஆந்திராவைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திலும் என்கவுன்டர் நடந்தது.
எர்ராபோர் பகுதியில் நேற்று காலை நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில், நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாவட்ட எஸ்.பி., கிரண் சவான் தெரிவித்து உள்ளார்.
மேலும், அந்த பகுதி யில் இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

