ADDED : செப் 26, 2024 06:30 AM

பெங்களூரு: பெங்களூரு மக்களை சில நாட்களாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது.
பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியின் டோல் பிளாசா அருகில், கடந்த 17ம் தேதி அதிகாலை, சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
எலக்ட்ரானிக் சிட்டி பெங்களூரின் மிக முக்கியமான வர்த்தக பகுதியாகும். இங்கு ஐ.டி., - பி.டி., நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. தொழிலாளர்கள் இரவு, பகலாக நடமாடுகின்றனர்.
கல்வி நிறுவனங்களும் அதிகம் உள்ளன. இத்தகைய பகுதியில் சிறுத்தை நடமாடியதால், மக்கள் அச்சமடைந்தனர். இதை பிடிக்கும்படி வனத்துறையிடம் வேண்டுகோள் விடுத்தனர். வனத்துறை அதிகாரிகளும், கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். சிறுத்தை எந்த இடத்தில் அதிகம் நடமாடுகிறது என்பதை கவனித்தனர்.
எலக்ட்ரானிக் சிட்டியின் ஹெலிபாட் இடத்தில் சிறுத்தை அதிகம் நடமாடுவதும், அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வசிப்பதும் தெரிந்தது.
எனவே ஹெலிபேட் இடம் உட்பட, மூன்று இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். நேற்று அதிகாலை உணவு தேடி வந்த சிறுத்தை, ஹெலிபேட் இடத்தில் இருந்த கூண்டில் சிக்கியது.
இது 5 வயதான ஆண் சிறுத்தை. இதை பன்னரகட்டா தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்வது குறித்து, வனத்துறையினர் ஆலோசிக்கின்றனர்.

