துப்புரவு தொழிலாளியின் புது வாழ்வுக்கு உதவிய லைப்ரரி
துப்புரவு தொழிலாளியின் புது வாழ்வுக்கு உதவிய லைப்ரரி
ADDED : ஜன 07, 2024 02:37 AM
குடகின், கிராம பகுதியில் உள்ள டிஜிட்டல் லைப்ரரி, துப்புரவு பெண் தொழிலாளர் ஒருவருக்கு புது வாழ்வு அளித்துள்ளது. அவர் கல்வி பெற உதவுகிறது.
மாணவர்களின் கல்விக்கு மட்டுமின்றி, பொதுமக்களின் அறிவுத்திறனை அதிகரிப்பதில், நுாலகம் பெரும் பங்கு வகிக்கிறது.
புது வாழ்க்கை
தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், நேர்முக தேர்வுக்கு தயாராவோருக்கு நுாலகம் உதவுகிறது. அதே போன்று துப்புரவு பெண் தொழிலாளி கல்வி பெற்று, புது வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது.
குடகு, விராஜ்பேட்டின், மால்தாரே கிராமத்தை சேர்ந்த பவானி, 48, ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். வறுமை காரணமாக பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தினகூலி வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
மால்தாரே கிராம பஞ்சாயத்தில், கடந்த 12 ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றுகிறார். கர்ப்பப்பை, மூலம், அபென்டிக்ஸ் உட்பட, ஐந்து அறுவைக்கு ஆளான பவானியால் அதிகமான பாரம் சுமக்க முடியாது.
உடல் நிலை சரியில்லாததால், தனக்கு மாற்று வேலை வழங்கும்படி, கிராம பஞ்சாயத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது அன்றைய பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி, “நீங்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், பஞ்சாயத்தில் அட்டெண்டர் பணி கிடைத்திருக்கும்,” என கூறினார்.
அதன்பின் பவானி, 10ம் வகுப்பு தேர்வெழுதி, தேர்ச்சி பெற்று அட்டெண்டர் பணியில் அமர வேண்டும் என, உறுதி பூண்டார். இதற்காக கிராமத்தின் டிஜிட்டல் லைப்ரரிக்கு சென்று, மேற்பார்வையாளர் சுஜாதாவிடம் உதவி கேட்டார்.
இவரும் பவானிக்கு தேவையான கல்வி பொருட்களை வரவழைத்து கொடுத்தார். பாடங்களை பதிவிறக்கம் செய்து கொடுத்தார். பாடங்கள் வீடியோ வடிவில் இருப்பதால், பவானியால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.
கடந்த 2022ம் ஆண்டு மார்ச்சில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். கன்னட பாடத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றார்.
அதன்பின் துணை தேர்வெழுதி, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதால், அட்டெண்டர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
பிடிவாதம்
டிஜிட்டல் நுாலகம் உதவியால், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலும், அட்டெண்டர் பணியில் அமர போராட வேண்டியுள்ளது. ஏனென்றால் இந்த பணியில், பவானியை நியமிக்க கூடாது. ஆண் ஊழியரை நியமிக்கும்படி, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர்.
- நமது நிருபர் -