ADDED : பிப் 13, 2024 07:01 AM
பெங்களூரு: அமைச்சர்களை தொடர்ந்து, சபாநாயகர் காதருக்கு 41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை, கர்நாடக அரசு வாங்கியுள்ளது.
கர்நாடக மாநில அரசு, சில மாதங்களுக்கு முன்பு, 33 அமைச்சர்களுக்கும், 9 கோடி ரூபாய் செலவில், இன்னோவா ஹைப்ரீடு சொகுசு கார்களை வாங்கியது.
மாநில விவசாயிகள் வறட்சியால் தத்தளிக்கும் நிலையில், அமைச்சர்களின் பயன்பாட்டுக்கு, இவ்வளவு செலவில் சொகுசு கார்கள் அவசியமா என, பலரும் கேள்வி எழுப்பினர். அரசின் செயல் சர்ச்சைக்கு காரணமானது. எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் கண்டித்தது.
இந்நிலையில் சபாநாயகர் காதருக்கு, டொயோட்டா பார்ச்சூனர் சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது. கறுப்பு நிற கார், சிறப்பான வடிவம் கொண்டுள்ளது.
இதன் விலை 41 லட்சம் ரூபாயாகும். 360 டிகிரியில் சுற்றும் கேமரா, பயணம் செய்யும்போது, சபாநாயகரின் முகத்துக்கு வெளிச்சம் தரும் சிறப்பு எல்.இ.டி., விளக்கு வசதி கொண்டுள்ளது.
காரின் முன் பகுதி, பின் பகுதியில் இரட்டைத் தலை பறவை முத்திரை உள்ளது. இத்தகைய முத்திரையை கவர்னர் மற்றும் சபாநாயகர்மட்டுமே பொருத்த அனுமதி உள்ளது.