5 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தார் மஹாராஷ்டிரா பெண்
5 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தார் மஹாராஷ்டிரா பெண்
ADDED : நவ 04, 2024 10:05 PM

தட்சிண கன்னடா; மஹாராஷ்டிராவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண், மங்களூரு தொண்டு நிறுவனத்தின் உதவியால் அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம், தானேயைச் சேர்ந்தவர்கள் மம்ரில் - அஸ்மா. வெளிநாட்டில் வசித்து வந்த இவர்கள், 15 ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு குடிபெயர்ந்தனர். அஸ்மா, அவ்வப்போது தனது தாய் வீட்டுக்கு ரயிலில் சென்று வந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 மே மாதம், வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில், 2019 ஜூன் 12ம் தேதி இரவு மங்களூரின் பனம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அஸ்மா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, 'ஒயிட் டோவ்ஸ்' என்ற தொண்டு அமைப்பின் நிறுவனர் கொரினா ரஸ்கின், அஸ்மாவிடம் விசாரித்துபோது, அவர், மனநலம் பாதிக்கப்பட்டது தெரிந்தது.
அவரை தனது தொண்டு அமைப்புக்கு அழைத்துச் சென்றார். அவரிடம் விசாரித்த போதும், முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, தனது வீட்டின் முகவரியை தெரிவித்தார். தொண்டு அமைப்பினரும், சம்பந்தப்பட்ட மும்பை பைகாலா போலீஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினர்.
போலீசார், அஸ்மாவின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், நேற்று முன்தினம் மங்களூருக்கு வந்தனர். தனது தாயை பார்த்த இரு மகன்களும், கட்டி அணைத்து, ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
பின்னர், அனைவரும் நேற்று மஹாராஷ்டிராவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு பின் தன் தாயை பார்த்த மகன், கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.