ADDED : அக் 28, 2024 08:10 AM

புதுடில்லி: மோசமான தரத்தாலும், பாலங்களும் சிலைகளும் விழுந்து மக்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அது மிகவும் கவலைக்குரியது என காங்கிரஸ் எம்,.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பொது மக்களுக்கு சேவை அளிப்பதற்கான நல்ல வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ஒரு திட்டத்திற்கு திறப்பு விழாவும் விளம்பரமும் நல்லது தான். ஆனால், ரிப்பன் வெட்டிய சில காலத்திலேயே பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், மோசமான தரத்தாலும், பாலங்களும் சிலைகளும் விழுந்து மக்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அது மிகவும் கவலைக்குரியது.
மும்பையின் பாந்த்ரா ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், இந்தியாவின் சிதைந்து வரும் உள்கட்டமைப்புக்கு ஒரு உதாரணம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாலசோர் ரயில் விபத்தில் 300 பேர் உயிரிழந்தனர், ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக, பா.ஜ., அரசு அவர்களை நீண்ட சட்டப் போராட்டத்தில் சிக்க வைத்துள்ளது.
சத்ரபதி சிவாஜி சிலை கூட 9 மாதங்களில் கீழே விழும் போது, அதன் நோக்கம் விளம்பரம் மட்டுமே என்பதை விளக்கியது. இதில் சிவாஜி மகாராஜுக்கு எந்த மரியாதையும் இல்லை, பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. இன்று, நாட்டிற்கு சர்வதேச தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. பொது சேவையை இலக்காகக் கொண்ட ஒரு பயனுள்ள மற்றும் வெளிப்படையான அமைப்பு நமக்குத் தேவை. மேலும் நாட்டிற்கான வலுவான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

