கோவில் குளத்திலிருந்த சிவலிங்கத்தை சேதப்படுத்திய மர்ம கும்பலுக்கு வலை
கோவில் குளத்திலிருந்த சிவலிங்கத்தை சேதப்படுத்திய மர்ம கும்பலுக்கு வலை
ADDED : ஜன 01, 2026 02:42 AM

காக்கிநாடா: ஆந்திராவில் கோவில் குளத்தில் இருந்த சிவலிங்கத்தை சேதப்படுத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திராவின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் திராசிராமம் கிராமத்தில் பீமேஸ்வரர் கோவில் உள்ளது.
இங்குள்ள கபாலேஸ்வரர் சன்னிதி அருகே குளக்கரையில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. நேற்று முன்தினம் இந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள், கோதாவரி ஆற்றில் நீராடிவிட்டு சிவலிங்கத்தை தரிசிக்க சென்றனர்.
அப்போது சிவலிங்கம் சுத்தியலால் சேதப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி கோவில் நிர்வாகி அளித்த புகாரின்படி போலீஸ் எஸ்.பி., ராகுல் மீனா, கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறப்பு குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அந்த கோவிலில் 'சிசிடிவி' இல்லாததால், அருகேயுள்ள கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுபற்றி அறிந்த, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, அறநிலையத்துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், கோவில் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே புதிதாக ஒரு சிவலிங்கம் அங்கு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

