ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி?
ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி?
UPDATED : ஜன 22, 2025 10:40 PM
ADDED : ஜன 22, 2025 10:19 PM

கரியாபந்த்: பல ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்த நக்சல் தலைவன், பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் உயிரிழந்தார். இவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இவர் உயிரிழந்தது மனைவியுடன் எடுத்த செல்பி உறுதிப்படுத்தியது.
சத்தீஸ்கர் - ஒடிசா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கரியாபந்த் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. குலாரிகாட் எனப்படும் இங்கு ஏராளமான நக்சல்கள் பதுங்கியிருப்பதாக சத்தீஸ்கர் அரசுக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து ரிசர்வ் போலீஸ் படை, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை, கமாண்டோ பிரிவினர் சிறப்பு நடவடிக்கை குழு ஆகியோர் உள்ளூர் போலீசாருடன் இணைந்து கடந்த 19ம் தேதி நள்ளிரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
மறுநாளும் இந்த மோதல் நீடித்தது. இச்சண்டையில் நக்சல்களின் முக்கிய தளபதியான ஜெய்ராம் ரெட்டி என்ற சலபதி ,60, உட்பட 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நக்சல்களின் மூத்த தலைவரான அவர், முக்கிய முடிவுகள் எடுக்கும் பொறுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஜெய்ராம் ரெட்டியை பிடித்து தருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஜெய்ராம் ரெட்டி உயிரிழந்தது, அவர் மனைவி அருணா உடன் எடுத்த செல்பி மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மனைவியும் நக்சல் அமைப்பில் துணை கமாண்டராக உள்ளார்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராம் ரெட்டி. இளம் வயதில் நக்சல் அமைப்பில் இணைந்தார். அந்த அமைப்பில் பல பொறுப்புகளில் இருந்துள்ளார்.
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் செயல்பட்டு வந்தார்.இங்கு அடிக்கடி என்கவுன்டர் நடப்பதால் அவர் தனது இருப்பிடத்தை மாற்றி, ஒடிசா எல்லைக்கு சென்றார். இவர் ராணுவ உத்திகள், கொரில்லா போர் முறைகளில் கற்று தேர்ந்தார். இவர், பள்ளி படிப்பு முடிக்காவிட்டாலும், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
ஒடிசாவின் நயாகார்க் மாவட்டத்தில் கடந்த 2008 ம் ஆண்டு நக்சல் நடத்திய தாக்குதலில் 13 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். இதற்கு மூளையாக செயல்பட்டவர் ஜெய்ராம் ரெட்டி. இதனால், அவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர், நயாகார்க் பகுதியில் போலீஸ் ஆயுதக்கிடங்களில் நக்சல்கள் ஆயுதங்களை கொள்ளையடித்து செல்ல உதவியுள்ளார். இதனையடுத்து அவர்களை தேடி போலீசார் வனப்பகுதிக்குள் நுழைய முயன்றனர். ஆனால், வழியில் மரங்களை வெட்டிப் போட்டு யாரும் உள்ளே நுழையாதபடி தடுப்பை இவர் ஏற்படுத்தி இருந்தார். 2011ல் கந்தமால் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் ஆயுதங்களை கொள்ளையடிக்க இவரது தலைமையில் முயற்சி நடந்தது. ஆனால், அதனை போலீசார் முறயடித்தனர்.
இவர் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.இதனால், அவர் எப்படி இருப்பார், அடையாளம் என்ன என்பது தெரியாமல் இருந்தது. ஆனால், 2016ம் ஆண்டு நக்சல்களுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு மொபைல்போன் பாதுகாப்பு படையினரிடம் சிக்கியது. அதில் ஜெய்ராம் ரெட்டி, மனைவியுடன் எடுத்துக் கொண்ட செல்பி மூலம் அவர் பாதுகாப்பு படையினரின் கவனத்தை பெற்றார். இதனையடுத்து அவரை பிடிக்க தீவிர முயற்சி நடந்தது. தற்போது நடந்த என்கவுன்டரில் ஜெய்ராம் ரெட்டி சுட்டுக் கொல்லப்பட்டது, அந்த செல்பி மூலம் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.