இதுவரை இல்லாத புதிய உச்சம்; அக்டோபரில் ரூ.23.5 லட்சம் கோடி ஆன்லைன் பணப்பரிவர்த்தனை!
இதுவரை இல்லாத புதிய உச்சம்; அக்டோபரில் ரூ.23.5 லட்சம் கோடி ஆன்லைன் பணப்பரிவர்த்தனை!
ADDED : நவ 02, 2024 12:30 PM

புதுடில்லி: கடந்த அக்டோபரில் இதுவரை இல்லாத அளவிற்கு யு.பி.ஐ., மூலம் ரூ.23.5 லட்சம் கோடி மதிப்புள்ள பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஒரு பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வரி செலுத்துதல், மருத்துமனைகள், கல்வி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சில்லறை நேரடி திட்டங்களுக்கு, ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஒரே பரிவர்த்தனையில் செலுத்தலாம்.
இந்நிலையில், யு.பி.ஐ., மூலம் கடந்த அக்டோபரில், இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.23.5 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, 1,658 கோடி, பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பரிவர்த்தனைகள் எண்ணிக்கையின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதத்தை விட 10 சதவீதம் அதிகம். பரிவர்த்தனைகள் மதிப்பின் அடிப்படையில் 14 சதவீதம் அதிகம் என தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.