நாட்டின் முதல் சக்திவாய்ந்த செயற்கைகோளை ஏவி இஸ்ரோ புதிய சாதனை!இயற்கை பேரிடர்களை கண்காணித்து எச்சரிக்கை விடுக்கும்
நாட்டின் முதல் சக்திவாய்ந்த செயற்கைகோளை ஏவி இஸ்ரோ புதிய சாதனை!இயற்கை பேரிடர்களை கண்காணித்து எச்சரிக்கை விடுக்கும்
UPDATED : செப் 04, 2026 09:29 PM
ADDED : செப் 04, 2026 08:34 PM
-நமது நிருபர்-
இந்தியாவை தொடர்ச்சியாக கண்காணிக்கும் பணிக்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ', மிகவும் சக்திவாய்ந்த, இ.ஓ.எஸ்., - 05 என்ற செயற்கைக்கோளை, முதல்முறையாக, ஜி.எஸ்.எல்.வி., - எப்17 ராக்கெட் வாயிலாக, புவி வட்டப்பாதையில் செலுத்தி அபார சாதனை படைத்துள்ளது.
நம் நாட்டின் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் உள்ளிட்டவற்றை துல்லியமாக அறியும் வகையில், மிகவும் சக்திவாய்ந்த செயற்கைக்கோளை, 'இஸ்ரோ' நேற்று அதிகாலை, 2:55 மணிக்கு விண்ணில் செலுத்தி சாதித்துள்ளது. ஜி.எஸ்.எல்.வி., - எப் 17 ராக்கெட் வாயிலாக, இ.ஒ.எஸ்., - 05 என்ற நிகழ்நேர படமெடுக்கும் செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்டு, 18 நிமிடங்கள், 34 வினாடிகள் பயணித்து, புவியின் ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
* ராக்கெட் - செயற்கைக்கோள்
செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தப் பயன்படுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., - எப் 17 ராக்கெட்டுக்கு, 'நாட்டி பாய்' என செல்ல பெயர் சூட்டியுள்ளது இஸ்ரோ. ஏவுதலின்போது, அடுத்தடுத்த நிலைகளை தொடர்ந்து அடைந்த நிலையில், அதை 'குட் பாய்' என வர்ணித்தனர்.
* செயற்கைக்கோள் சிறப்பு
பூமியில் இருந்து, 36,000 கி.மீ., உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முதல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஒ.எஸ்., - 05 செயற்கைக்கோள், நிகழ்நேரத்தில் மிகத்துல்லியமான படங்களை எடுத்து அனுப்பும் வகையில், புவியின் வேகத்திலேயே தொடர்ந்து, இந்தியாவை வலம் வரும். அந்த வகையில், இந்தியாவின் முதல் சக்திவாய்ந்த செயற்கைக்கோளாக இது வலம் வரும்.
இதுவரை, எல்.இ.ஓ., எனும், குறைந்த புவி சுற்றுப்பாதையில், இந்தியா செயற்கைக்கோள்களை செலுத்தியதால், இந்தியாவை ஒவ்வொரு முறையும் படம் எடுக்க, குறைந்தது, 10 நாட்கள் இடைவெளி இருந்தது. தற்போது, 2,368 கிலோ எடையுடன், மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்ப கருவிகள் இணைக்கப்பட்டு, விண்ணில் செலுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள், இரவு, பகல் பாராமல் தொடர்ச்சியாக, இந்தியாவை கண்காணிக்கும்.
இதன் பணிக் காலம் 7 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 ஆண்டுகள் வரை பணியாற்றும் வகையில், மிகவும் சக்தி வாய்ந்த 2,280 வாட்ஸ் 'சோலார் பேனல்'கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 'ஹைப்பர் ஸ்பெக்ட்ரல்' எனும் சக்திவாயந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
* பணிகள்
* புயல், வெள்ளப்பெருக்கு மற்றும் காட்டுத்தீ போன்ற பேரிடர்களை, உடனுக்குடன் கண்காணித்து எச்சரிக்கை விடுக்கும்
* நாட்டின் எல்லைப் பகுதிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
* காலநிலை, விவசாயம் மற்றும் வானிலை கணிப்புகளுக்கும் இது உதவும்.
* உள்நாட்டு தொழில்நுட்பம்
ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் மேல்நிலை, 'கிரையோஜெனிக்' இன்ஜின், சரியாக செயல்பட்டு, செயற்கைக்கோளை துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தொழில்நுட்பம், முழுக்க முழுக்க, இஸ்ரோ விஞ்ஞானிகளால், கண்டறியப்பட்டது. இந்திய தொழில்நுட்பம் என்பதால், இஸ்ரோவிற்கு பெருமை சேர்த்துள்ளது.
* ராக்கெட் அமைப்பு
இ.ஒ.எஸ்., - 05 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ஜி.எஸ்.எல்.வி., - எப் 17 ராக்கெட், மூன்று நிலைகளுடன், 5.7 மீட்டர் உயரம், 420 டன் எடையுடன், மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக வடிவமைக்கப்பட்டது.
இதை விண்ணில் செலுத்த, திட, திரவ, கிரையோஜெனிக் எனும் மூன்று நிலை எரிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
* சுற்றுப்பாதை
தற்போது, புவியின் துணை வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், அடுத்த 5 - 6 நாட்களில், துல்லியமான இறுதிச் சுற்றுப்பாதைக்கு, இன்ஜின்களின் உதவியால், கட்டுப்பாட்டு அறையிலிருந்து செலுத்தப்படும். அதன்பின், அதற்கு அளிக்கப்பட்டுள்ள பணிகளை தொடங்கும்.
