பொழுதுபோக்கும் வாடிக்கையாளர்கள் ஹோட்டல்களில் புதிய விதிமுறை அமல்
பொழுதுபோக்கும் வாடிக்கையாளர்கள் ஹோட்டல்களில் புதிய விதிமுறை அமல்
ADDED : ஜன 29, 2024 11:06 PM
பெங்களூரு: வெறும் காபி குடித்து, மணிக்கணக்கில் பேசியபடி அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களை தடுக்க, ஹோட்டல் உரிமையாளர்கள் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளனர்.
ஹோட்டலுக்கு வரும் பலர், மணிக்கணக்கில் பேசியபடி அமர்ந்திருக்கின்றனர். உணவு, சிற்றுண்டியை விட, காபி, டீ குடிக்க வரும் வாடிக்கையாளர்களே அதிகம். குடித்து முடித்த பின். எழுந்து செல்வதும் இல்லை. இது ஹோட்டல் உரிமையாளர்களுக்கு, பெரும் தலைவலியாக உள்ளது.
எழுந்து செல்லும்படி கூற முடியாமல், ஹோட்டல் ஊழியர்கள் கையை பிசைகின்றனர். இருக்கை காலியாக இல்லாததால், மற்ற வாடிக்கையாளர்கள் திரும்பிச் செல்கின்றனர். இது ஹோட்டல்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதை கருத்தில் கொண்டு, புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராவ் கூறியதாவது:
சமீப நாட்களாக காபி, டீ குடிக்க அதிகமானோர் வருகின்றனர். குடித்தவுடன் எழுந்து செல்வதில்லை. மணிக்கணக்கில் காலம் கடத்துகின்றனர். இவர்களை முகத்துக்கு நேராக, எழுந்து செல்லுங்கள் என, கூறவும் முடியாது.
வாடிக்கையாளர்களின் மனம் கோணாமல், தொழில் நடத்த வேண்டியுள்ளது. எனவே பெங்களூரின் ஹோட்டல்களில், புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளோம். அனைத்து மேஜைகளிலும் 'உணவு, சிற்றுண்டி முடிந்த பின், பில் செலுத்திவிட்டு புறப்படுங்கள்' என்ற போர்டு வைத்துள்ளோம். இதை கவனிக்கும் வாடிக்கையாளர்கள், உணவை முடித்தவுடன் எழுந்து செல்வர்.
ரியல் எஸ்டேட், மேட்ரிமோனியல், வியாபாரம் தொடர்பான பேச்சு, பெரும்பாலும் ஹோட்டல்களில் நடப்பது வழக்கம். ஒரு கப் காபி ஆர்டர் செய்துவிட்டு, மணிக்கணக்கில் பேசுகின்றனர். இதனால் மற்றவர்கள் இடமில்லாமல், சிரமப்படுகின்றனர்.
போர்டு வைக்கும் விதிமுறை, அதிகமான இருக்கைகள் கொண்ட, பெரிய ஹோட்டல்களுக்கு மட்டுமே பொருந்தும். சாதாரண ஹோட்டல்களுக்கு பொருந்தாது. இந்த விதிமுறையை, வாடிக்கையாளர்களும் வரவேற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.