ADDED : அக் 15, 2024 01:53 AM
புதுடில்லி, நம் அண்டை நாடான சீனா, நம் நாட்டு எல்லைக்கு அருகே, தன் பகுதியில் பல புதிய உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வருகிறது.
எல்லை பகுதி வரை சாலைகள், பாலங்கள் போன்றவற்றை அமைத்து வருகிறது. இதைத் தவிர சில குடியிருப்பு வளாகங்களையும் உருவாக்கியுள்ளது. இங்கு சீன மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதைத் தவிர, ராணுவத்துக்கு தேவையான கட்டமைப்புகளையும் சீனா உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், கிழக்கு லடாக்கில் பாயும் பான்காங் ஏரியின் வடக்கே, தன்னுடைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், புதிய கிராமம் ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது.
இது, எல்லையில் இருந்து, 36 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இங்கு, 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் 6 - 8 ராணுவ வீரர்கள் தங்க முடியும். மேலும், ராணுவத் தளவாடங்களையும் பாதுகாக்க முடியும்.
மக்களை குடியமர்த்துவதற்காக இந்த கிராமம் உருவாக்கப்படுவதாக சீனா கூறி வருகிறது. ஆனால், தேவைப்படும்போது ராணுவமும் பயன்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2022 ஏப்.,ல் இந்த பகுதி யாரும் பயன்படுத்தாத பகுதியாக இருந்தது. தற்போது அங்கு மக்களை குடியமர்த்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

