சிக்னலில் தடுத்த போலீசாரை தட்டி துாக்கிய காரில் வந்த நபர்
சிக்னலில் தடுத்த போலீசாரை தட்டி துாக்கிய காரில் வந்த நபர்
ADDED : நவ 04, 2024 03:23 AM
புதுடில்லி,: டில்லியில் சாலையில் சிவப்பு விளக்கு சிக்னலை மதிக்காமல் செல்ல முயன்ற காரை போலீசார் இருவர் தடுத்தபோது, காரை ஓட்டிய நபர் அவர்கள் மீது மோதி தரதரவென்று இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
டில்லியின் பேர் சராய் பகுதியில் நேற்று முன்தினம் இரு போலீசார் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வெள்ளை நிற 'மாருதி சுசூகி பிராங்க்ஸ்' கார், சிவப்பு விளக்கு சிக்னலை மதிக்காமல் கடந்து செல்ல முயன்றது.
இதை கவனித்த போக்கு வரத்து போலீசார் காரை நிறுத்தச் சொல்லி சாலையின் குறுக்கே வந்தனர்.
அப்போதும் காரை நிறுத்தாத டிரைவர், எதிரே நின்ற இரண்டு போலீசார் மீது காரை ஏற்றினார்.
இதில் நிலை தடுமாறிய போலீசார் காரின் பானட் எனப்படும் முன்புற என்ஜின் பகுதியில் மேல் விழுந்தனர். அவர்களை விடாமல் 20 மீட்டர் துாரத்துக்கு இழுத்துச் சென்ற கார் டிரைவர், காரை வேகமெடுத்து இரு போலீசாரையும் கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றார்.
இதனை அங்கு நின்றிருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அதில் தெரியும் கார் எண்ணை வைத்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.