பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு சார்பில் ஜமா மஸ்ஜித் பகுதியில் நடந்த யாத்திரை
பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு சார்பில் ஜமா மஸ்ஜித் பகுதியில் நடந்த யாத்திரை
ADDED : ஆக 14, 2025 09:30 PM
புதுடில்லி:டில்லியின் ஜமா மஸ்ஜித் பகுதியில், டில்லி பா.ஜ.,வின் மைனாரிட்டி மோர்ச்சா சார்பில் நடந்த மூவர்ண கொடி யாத்திரையில் ஏராளமான சிறுபான்மையினர் பங்கேற்றனர்.
ஜமா மஸ்ஜித் பகுதியில் உள்ள மீனா பஜாரில் துவங்கிய மூவர்ண கொடி யாத்திரைக்கு, டில்லி பா.ஜ., தலைவர் விரேந்திர சச்தேவா தலைமை வகித்தார். அந்த நிகழ்ச்சியில், பா.ஜ., தலைவர்களில் ஒருவரான அடிப் ரஷீத், டில்லி பா.ஜ., மைனாரிட்டி மோர்ச்சா தலைவர் அனீஷ் அப்பாசி, கட்சியின் இப்போதைய டில்லி பொறுப்பாளர் கோரி முகமது ஹரூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், ஏராளமான முஸ்லிம்களும் பங்கேற்றனர். அதுகுறித்து, அனீஷ் அப்பாசி கூறும் போது, ''தேசபக்தி என்பது குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல. ஒவ்வொரு இந்தியரின் இருதயத்தில் குரல் அது. இந்த நாட்டின் தியாகம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை இந்த பேரணி எடுத்துக் காட்டுகிறது,'' என்றார்.
பா.ஜ., மூத்த தலைவர் அடிப் ரஷீத் கூறும் போது,''மூவர்ண யாத்திரையில் முஸ்லிம்கள் பலரும் பங்கேற்றது, வரலாற்று சிறப்பு மிக்கது. இதன் மூலம் நாட்டின் பிற பகுதியினருக்கு வலுவான செய்தி தரப்பட்டுள்ளது,'' என்றார்.
இந்த பேரணியில் பங்கேற்ற பலரும், ஆப்பரேஷன் சிந்துார் பெருமையை பறை சாற்றினர்.

