புத்தகப்பையில் இருந்தது 'பொருள்!' மாணவனால் 'ஷாக்' ஆனது பள்ளி நிர்வாகம்
புத்தகப்பையில் இருந்தது 'பொருள்!' மாணவனால் 'ஷாக்' ஆனது பள்ளி நிர்வாகம்
ADDED : ஆக 25, 2024 12:56 PM

புதுடில்லி: டில்லியில் புத்தகப்பையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பள்ளிக்கு மாணவன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பள்ளிக்கு மாணவன் பாடப்புத்தகம் கொண்டு போகலாம். அதோடு சாப்பாட்டு பையையும் எடுத்துச் செல்லலாம். ஆனால் துப்பாக்கியை எடுத்துச் சென்றால்... எப்படி இருக்கும்? அப்படி ஒரு திடுக்கிடும் சம்பவம் டில்லியில் அரங்கேறி அதிர்ச்சியை விதைத்து இருக்கிறது.
இது பற்றிய விவரம் வருமாறு; புதுடில்லியில் நஜப்கர் பகுதியில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. நேற்றைய தினம் வழக்கம் போல் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரத் தொடங்கி உள்ளனர்.
அப்போது ஒரு மாணவனின் செய்கைகள் மட்டுமே வித்தியாசமாக இருப்பதை பள்ளி நிர்வாகத்தினர் கண்டு குழப்பம் அடைந்தனர். என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே மாணவன் கொண்டு வந்த பையை சோதனையிட்டனர். வழக்கமாக இருக்க வேண்டிய புத்தகங்களுக்கு பதில் அதனுள் கைத்துப்பாக்கி இருப்பது கண்டு மிரண்டு போயினர்.
உடனடியாக இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்தனர். பள்ளிக்குள் நுழைந்த போலீசார், அந்த கைத்துப்பாக்கியை வாங்கி பரிசோதித்து பார்த்தனர். அந்த துப்பாக்கி மாணவனின் தந்தைக்குச் சொந்தமானது, அவரது பெயரில் உரிமம் வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு மாணவன் தந்தை காலமாகிவிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் உடனடியாக அதற்கான உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். சம்பவம் நடைபெற்ற பள்ளி, மாணவன் பெயர் மற்றும் துப்பாக்கி உரிமம் வைத்துள்ள மாணவன் தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.