ஆடு வளர்த்து கோடீஸ்வரரான தபால் ஊழியர்; ஆட்டுக்குட்டிகளை குழந்தைகள் போல் பராமரிப்பு
ஆடு வளர்த்து கோடீஸ்வரரான தபால் ஊழியர்; ஆட்டுக்குட்டிகளை குழந்தைகள் போல் பராமரிப்பு
ADDED : செப் 14, 2024 11:36 PM

உத்தர கன்னடா மாவட்டம், சிர்சி தாலுகா, அச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மதுகேஸ்வர நாயக், 43. தபால் துறை ஊழியராக ஹூப்பள்ளியில் பணிபுரிகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த அவருக்கு ஆடுகளை வளர்க்க வேண்டும் என்பது சிறு வயது கனவு.
இதை கேட்டதும், நம்மில் பலர் நகைப்பது உண்மை. ஆடு வளர்ப்பது கனவா என்று கேலி செய்வோம். ஆனால், ஆடு வளர்த்து லட்சக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்துள்ளார் என்றால், பாராட்ட வேண்டாமா?
மருத்துவர், பொறியாளர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, தொழிலதிபர் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். ஆனால், மதுகேஸ்வர நாயக்கிற்கு, சிறு வயதை கனவை எப்படியாவது நனவாக்க வேண்டும் என்று கருதினார்.
*ரூ.1 கோடி நிதி
இதற்காக, மாநில கால்நடை துறையின், தேசிய வாழ்வாதார திட்டத்தின் கீழ், 1 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றார். இதில், 50 சதவீதம் மானியமாகும்.
இந்த பணத்தை வைத்து, தன் நிலத்தில் ஒரு ஷெட் அமைத்தார். ஹாவேரியின் ராணிபென்னுார், பெலகாவியில் இருந்து, 535 ஆட்டுக்குட்டிகளை வாங்கி வந்தார். 10 தொழிலாளர்களை நியமித்து, ஆட்டுக்குட்டிகளை பிள்ளைகள் போன்று பராமரித்து வருகிறார்.
விடுமுறை நாட்களில், தானும் நேரில் சென்று, தீவனம் போடுவது, தண்ணீர் ஊற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்.
ஆறு மாதங்களுக்கு பின், ஆடுகள் நன்றாக வளர்ந்துவிட்டன. முதல் கட்டமாக, 150 ஆடுகளை அருகில் உள்ள சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்தார். ஒவ்வொரு ஆடும் 18 முதல் 22 கிலோ வரையில் வளர்ந்த உடன் விற்றுவிடுகிறார்.
*இயற்கை உரம்
ஆடுகளின் சாணத்தை இயற்கை உரமாக மாற்றுகிறார். அதை தன் நிலத்துக்கும் பயன்படுத்துகிறார். அதிகமாக இருக்கும் உரத்தை, மாதந்தோறும் விற்பனை செய்கிறார். இதன் மூலம், மாதத்துக்கு 20,000 முதல் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
ஒவ்வொரு ஆடும் தலா 10,000 முதல் 15,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. இப்படி கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டுக்கு 10 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்துள்ளார்.
ஆடுகள் வளர்ப்பதுடன் நிற்காமல், 5 ஏக்கர் நிலத்தில், பாக்கு, வாழை, தென்னையும்; 1 ஏக்கரில் பனை மரங்களும் வளர்த்து வருகிறார். மேலும், கோழி, மீன், தேன் வளர்ப்பு என விவசாயத்தில் ஊறிவிட்டார். இத்தொழிலை ஏழு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். இதற்கு முன்னதாக, அவரது பெற்றோருக்கு உதவி வந்துள்ளார்.
விவசாயம் செய்வது மிகவும் பிடிக்கும். கால்நடை வளர்ப்பதில் திருப்தி கிடைக்கும். முறையாக திட்டமிட்டு செய்தால் நஷ்டம் ஏற்படாது. விவசாயத்துடன், இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும். விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுகிறது என்று சொல்வதை விட்டு விட்டு, லாபகரமாக மாற்றுவது எப்படி என்பதை கண்டறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
- மதுகேஸ்வர நாயக்
- நமது நிருபர் -