ADDED : பிப் 18, 2024 01:15 AM

மொத்தம் 4 ஏக்கர் நிலத்தில், இயற்கை விவசாயம் செய்து வரும், வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் குமார்:
நாட்டு ரக காய்கறிகளை பரவலாக்கம் செய்யும் நோக்கத்தோடு, ஓராண்டுக்கு 2 லட்சம் நாற்றுகள் மற்றும் விதைகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறேன்.
எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான, ஒரு ஏக்கர் நிலத்தில், 40 சென்ட் பரப்பில் மட்டும் பழ மரங்கள் சாகுபடி செய்திருக்கிறேன்.
இதை உணவுக் காடாக உருவாக்கணும் என்பதே என் நோக்கம். அத்தி, நாவல், மா, பலா, கொய்யா, சப்போட்டா, ராம் சீத்தா, முள் சீத்தா, மாதுளை, நெல்லி, பப்பாளி உட்பட பலவித பழ மரங்கள், இருக்கின்றன.
இந்த மரங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடவு செய்தது. கொய்யா, சப்போட்டா, அத்தி, மாதுளை, பப்பாளி மரங்கள் தற்போது காய்ப்புக்கு வந்துடுச்சு; மற்ற மரங்கள் இன்னும் ஓரிரு ஆண்டு களில் காய்ப்புக்கு வந்துவிடும்.
இங்கு வாழையும் பயிர் செய்கிறேன். இந்த உணவுக் காட்டில் கிடைக்கக்கூடிய பழங்களை வெளியில் விற்பனை செய்வதில்லை; எங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்திக்குவோம்.
பழ மரங்களுக்கு இடையில் ஊடுபயிர்களாக சுண்டைக்காய், மிளகாய், தக்காளி, மஞ்சள், இஞ்சி, மரவள்ளிக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக் கிழங்கு, மூக்குத்தி அவரை, சிறகு அவரை, பொரியல் தட்டை, பாகல் உள்ளிட்ட காய்கறிகளும், பசலி, வல்லாரை உள்ளிட்ட கீரை வகைகளும் பயிர் செய்கிறேன்.
மீதியுள்ள, 60 சென்ட் பரப்பில் இலவம்பாடி முள் கத்திரி, பவானி கத்திரி, மதனப்பள்ளி தக்காளி, காந்தாரி மிளகாய் உட்பட இன்னும் பல வகையான நாட்டு ரக காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறேன்.
ஓராண்டுக்கு, 2 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்கிறேன். ஒரு நாற்று ஒரு ரூபாய் என விற்பனை செய்கிறேன். நாற்றுகள் விற்பனை வாயிலாக, ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
இதுபோக, 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, இயற்கை விவசாயம் செய்கிறேன். எங்கள் குடும்பத்தில் மூன்று வேளையும், பாரம்பரிய அரிசியில் சமைத்த உணவையே சாப்பிடுகிறோம்.
வீட்டிற்கு தேவையான அனைத்தும் சத்தான முறையில் கிடைக்கிறது. இயற்கையோடு இயைந்த தற்சார்பு வாழ்க்கை வாயிலாக கிடைக்குற நிம்மதியையும், சந்தோஷத்தையும் நேரடியாக அனுபவிச்சுட்டு இருக்கேன்.
லாப நோக்கத்தோடு இயற்கை விவசாயத்தில் நான் இறங்கவில்லை. ஆனாலும் கூட, எல்லா செலவுகளும் போக, ஓராண்டுக்கு, 4 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தொடர்புக்கு:
96558 93668.