ADDED : மார் 03, 2024 01:56 AM

இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள, அந்தமான் நிக்கோபார் தீவில் வசிக்கும், விவசாயி செல்லம்மாள் காமாட்சி:
நான் ஆறாம் வகுப்பு வரைக்கும் தான் படிச்சிருக்கேன். இப்போது எனக்கு, 69 வயதாகிறது. மத்திய அரசு வழங்கக்கூடிய மிக உயரிய விருதான, பத்மஸ்ரீ எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு முதன்மை காரணம், இயற்கை விவசாயம்.
பூர்வீகம், கரூர் மாவட்டத்தில் உள்ள தாளப்பட்டி கிராமம். எனக்கு 3 வயசு இருக்கும்போதே, பெற்றோர் அந்தமானுக்கு வந்துட்டாங்க. விவசாய கூலி வேலைக்கு போய் தான் குடும்பத்தை காப்பாத்தினாங்க. 1969ல் திருமணம் ஆனது.
என் கணவர் காமாட்சி, அந்தமானில் தான் இருந்தார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்போது வசிக்கும் ரங்கசாங்க் பகுதியில், அவருக்கு 10 ஏக்கர் நிலம் இருந்துச்சு. எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். கணவரோடு சேர்ந்து, நானும் விவசாய வேலைகளில் கவனம் செலுத்த துவங்கினேன்.
இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத அந்த காலகட்டத்திலேயே நாங்கள், ரசாயன பயன்பாட்டை தவிர்க்க துவங்கி விட்டோம்.
இப்போது, என் தோட்டத்தில், 750 தென்னை மரங்கள் இருக்கு. அதோடு ஊடுபயிராக, 3,000 பாக்கு மரங்கள், 2,500 வாசனை பட்டை மரங்கள், 200 மூங்கில் மரங்கள், 100 சப்போட்டா மரங்கள், 50 பிரியாணி இலை மரங்கள், 10 ஜாதிக்காய் மரங்களும் இருக்கு.
இவை தவிர மிளகு, அன்னாசி, வாழை, மஞ்சள், நெல்லியும் இருக்கு. இந்தப் பகுதியில் உள்ள நிலங்கள் அதிக மேடு, பள்ளங்கள் கொண்டதாக இருக்கும்; சரிவும் அதிகமாக இருக்கும். இதனால் மழைக்காலத்தில் மண் அரிப்பு ஏற்படும். அதை தடுக்க, நாட்டு மூங்கில் மரங்கள் வளர்க்க துவங்கினேன்.
வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி எல்.பி.சிங் கூறியபடி, ஊடுபயிராக மிளகு பயிர் செய்ய துவங்கினேன்; அருமையான வருமானம் கிடைத்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இயற்கை விவசாயத்தில் வெற்றிநடை போடுவதோடு நீர் மேலாண்மை, ஊடுபயிர்கள் சாகுபடி, இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து, மற்ற விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
இந்த 10 ஏக்கர் தோட்டம் வாயிலாக, ஆண்டுக்கு, 11 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதில் எல்லா செலவுகளும் போக, 8 லட்சம் ரூபாய் லாபமாக கையில் மிஞ்சும்.
எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்கு என்னோட குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள மற்ற இயற்கை விவசாயிகளும் சந்தோஷப்படுறாங்க. மனதார வாழ்த்துறாங்க.

