21 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த தங்க நகை அதே எடையில் பார்சலில் வந்தது மாற்று நகை
21 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த தங்க நகை அதே எடையில் பார்சலில் வந்தது மாற்று நகை
ADDED : செப் 08, 2025 03:33 AM

பாலக்காடு,: பாலக்காடு அருகே, 21 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தங்க சங்கிலி மீண்டும் கிடைத்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பைலிப்புரத்தைச் சேர்ந்தவர் கதீஜா, 65. இவர், 21 ஆண்டுகளுக்கு முன், 3.5 சவரன் தங்க சங்கிலியை தொலைத்து விட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், இவருக்கு ஒரு பார்சல் வந்தது. அதை பிரித்த போது, கதீஷா குடும்பத்தினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். பெயர் எதுவும் குறிப்பிடாமல் வந்த அந்த பார்சலில், 3.5 சவரன் எடையில் தங்கச் செயின் இருந்தது.
கதீஜா கூறியதாவது:
நானும், மகன் இப்ராஹிமும், 21 ஆண்டுகளுக்கு முன் வளாஞ்சேரி பகுதியில் 3.5 சவரன் தங்க சங்கிலியை தொலைத்து விட்டேன். எதிர்பாராத விதமாக, அடையாளம் தெரியாத ஒருவர், ஒரு கடிதத்துடன் இழந்த சங்கிலிக்கு பதிலாக அதே அளவில் மற்றொரு சங்கிலியை பார்சலில் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், 'சில ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் இருந்து தொலைந்து போன தங்க நகை எனக்கு கிடைத்தது. அதை என் வாழ்க்கை சூழ்நிலைக்காக பயன்படுத்தி கொண்டேன். இன்று நான் அதை நினைத்து வருந்தி வாழ்கிறேன்.
'அதனால், இந்த கடிதத்துடன் அது போன்ற தங்கச் சங்கிலியை வைத்துள்ளேன். நீங்கள் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு உங்கள் பிரார்த்தனையில் என்னையும் உட்படுத்த வேண்டும்' என கூறியிருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.