ADDED : பிப் 09, 2024 07:22 AM

பெங்களூரு: 'ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக, சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும்,' என்று, முதல்வர் சித்தராமையாவிடம், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
சிக்கபல்லாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், 39. இவருக்கு நேற்று பிறந்தநாள். இதை ஒட்டி, பெங்களூரில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் முதல்வரிடம் ஒரு கடிதம் கொடுத்தார்.
கடிதத்தில், 'பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும், குழந்தைகள் நலனுக்காக சிறப்பு திட்டத்தை, மாநில அரசு வகுக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு உயர்கல்வி கிடைக்க, அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.
பின்னர் பிரதீப் ஈஸ்வர் கூறுகையில், ''சிறுவயதில் பெற்றோரை இழந்தவன் நான். ஆதரவற்ற குழந்தைகள் வலி எனக்கு தெரியும்.
இதனால் அந்த குழந்தைகளுக்காக, முதல்வரிடம் ஒரு சில கோரிக்கை வைத்து உள்ளேன். இதற்கு சாதகமான பதில் கிடைத்து உள்ளது,'' என்றார்.

