துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்; லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரருக்கு வலைவீசும் என்.ஐ.ஏ.,
துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்; லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரருக்கு வலைவீசும் என்.ஐ.ஏ.,
UPDATED : அக் 25, 2024 11:13 AM
ADDED : அக் 25, 2024 11:02 AM

புதுடில்லி: பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.
மும்பையில் கடந்த அக்.,12ம் தேதி இரவு மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான பாபா சித்திக் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தான் கொலைக்கு காரணம் என போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரிய வந்தது. குறிப்பாக, லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயிக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், பானு எனப்படும் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது. இவன் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
2022ல் பஞ்சாப் பாடகர் சித்து மோசேவாலா கொலை வழக்கிலும் இவன் தேடப்பட்டு வருகிறான். கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடிகர் சல்மான் கான் வீட்டின் வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மும்பை போலீசாரால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டான்.
தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் அன்மோல் பிஷ்னோய், போலி பாஸ்போர்ட் மூலம் கடந்த ஆண்டு கென்யாவுக்கு தப்பியோடிய நிலையில், தற்போது கனடாவில் தஞ்சம் புகுந்துள்ளான்.