ADDED : நவ 09, 2024 11:10 PM

கலைத்திறன் என்பது அனைவருக்கும் வரமாக அமைவதில்லை. சிலரிடம் மட்டுமே கலை புகுந்து விளையாடும். இவர்களில், சிற்பி ஆனந்த் பன்னப்பா படிகேராவும் ஒருவர். இவர் அழகான, கலை நயம் கொண்ட ரதங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்.
கதக், நரேகல்லின் ஹொசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் பன்னப்பா படிகேரா, 40. இவர் அற்புதமான சிற்பக்கலைஞர்.
குறிப்பாக கலை நுணுக்கங்களுடன், ரதங்கள் தயாரிப்பதில் பிரசித்தி பெற்றவர். உளியை கையில் பிடித்துவிட்டால், அற்புதமான கலை விளையாடும். பெலகாவி, கொப்பால் மாவட்டங்களின் பெரும்பாலான கோவில்களுக்கு, இவர் ரதம் தயாரித்துக் கொடுத்துள்ளார்.
டக் டக்
ஹொசஹள்ளி - ரோணா பிரதான சாலையின் அருகில் நுழைந்தால், 'டக் டக்' என்ற சத்தம், பொது மக்களை ஈர்க்கும். சத்தத்தை பின் தொடர்ந்து சென்றால், ரத சிற்பக்கலை மையத்தில் ஆனந்த் பன்னப்பா படகேரா தென்படுவார்.
மையத்துக்குள் சென்றால் கலை உலகுக்கு வந்ததை போன்ற உணர்வு ஏற்படும். பலவிதமான கலை வேலைப்பாடுகள் கொண்ட பொருட்களை காணலாம்.
சாகவானி, வேப்பம் உட்பட பல்வேறு மரங்களின் கட்டைகள், இவரது கைவண்ணத்தில் கலைப் பொருட்களாக உயிர் பெற்று, மக்களை ஈர்க்கின்றன. ரதங்கள் தயாரிக்க ஹளியாலா, மலைப்பகுதிகளில் உள்ள சாகவானி மரக்கட்டைகளை மட்டும் பயன்படுத்துகிறார்.
ஹுனசியாளா கிராமத்தின் சரண பசவேஸ்வரா, இடகி கிராமத்தின் துர்க்காதேவி, பட்டலசிந்தியின் தாமம்மா தேவி, சிலஜரி கிராமத்தின் கரியம்மா தேவி கோவில்களுக்கு, மரப்பல்லக்கு தயாரித்துக் கொடுத்துள்ளார்.
சிந்தகியின் அலமேலா, பொம்மனாளா, மசபினாளா, மளியப்பஜ்ஜன மடத்தில் உள்ள சிம்மாசனம், இவர் தயாரித்தது. பல கோவில்களுக்கு கதவுகளும் தயாரித்து கொடுத்துள்ளார்.
8 ஆண்டு பயிற்சி
ரதம் தயாரிப்பது குறித்து, ஹொல ஆலுாரின் பாண்டுரங்கா படிகேரா, மகேஷ் ஹெப்பள்ளியிடம் எட்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றார். அதன்பின் சொந்த கிராமத்தில் தன் கலைப்பணியை துவக்கினார். ரதம் தயாரிப்பதில் மிகவும் பிரசித்தி பெற்றார்.
பாகல்கோட்டின் மங்களகுட்டா மங்களாதேவியின் 51 அடி; கொப்பால் எலபுர்காவின் ஹுனசிஹாளா கிராமத்தின் சரண பசவேஸ்வரா கோவிலுக்கு 35 அடி; கதக்கின் நிடஷுன்டியின் பீமாம்பிகா தேவி கோவிலுக்கு 41 அடி; நெல்லுார் சாந்தேஸ்வரா கோவிலுக்கு 31 அடி; பெலகாவியின் யாதவாடாவின் ஹொன்னம்மா தேவி கோவிலுக்கு 21 அடி உயர ரதம் உட்பட பல்வேறு கோவில்களுக்கு ரதம் தயாரித்துக் கொடுத்துள்ளார்
- நமது நிருபர் -.