ADDED : பிப் 21, 2025 05:36 AM

கிராமப்புறங்களில் வசிக்கும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு ஆறு, கிணறு, ஏரியில் நீச்சல் அடிக்க கற்று கொடுப்பர். ஆனால் நகரத்தில் வசிக்கும் பெற்றோருக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனால், தங்கள் பிள்ளைகளை நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும் பயிற்சியில் சேர்த்து விடுகின்றனர்.
நகர்ப்புறங்களில் வசிக்கும் பிள்ளைகள் நீச்சல் குளங்களில், நீச்சலை வேகமாக கற்றுக் கொண்டு போட்டிகளிலும் கலந்து சாதித்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் ஷிகா டாண்டன், 40.
நீச்சல் வகுப்பு
பெங்களூரை சேர்ந்த இவருக்கு சிறுவயதில் நீச்சல் அடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை. இவரது சகோதரர் சோபித் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் நுரையீரல் திறனை மேம்படுத்த சோபித்தை, அவரது தாய் நீச்சல் பயிற்சிக்கு சேர்த்து விட்டார். தம்பி, நீச்சல் வகுப்புக்கு செல்லும்போது ஷிகா டாண்டன் கூடவே செல்வார்.
அந்த பயிற்சி மையத்தில், நீச்சல் அடித்தவர்களை பார்த்து, தனக்கும் நீச்சல் அடிக்க வேண்டும் என்ற ஆசை ஷிகா டாண்டனுக்கு வந்தது. இது பற்றி பெற்றோரிடம் கூற, அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். அவருக்கு 11 வயது இருக்கும்போது நீச்சல் பயிற்சியை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.
ஒரே ஆண்டில் சிறப்பாக நீச்சல் அடிக்க கற்று கொண்டார். 12 வயதில் தேசிய நீச்சல் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் போட்டியிலேயே வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.
பதக்கங்கள்
தன்னுடைய 16 வது வயதில் நீச்சல் போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்தார்.
பின், பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்தார். தனது கேரியரில் 146 தேசிய பதக்கங்கள், ஐந்து தங்கம், 36 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். நீச்சல் மட்டுமின்றி படிப்பிலும் சிறந்த நபராக வலம் வந்தார்.
பெங்களூரு பல்கலைக் கழகத்தில் உயிரி தொழில்நுட்பம் படித்தார். பின், ஓஹியோ வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக் கழகத்தில் உயிரியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இரட்டை முதுகலை பட்டம் பெற்றார். தற்போது அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்சில் உள்ள அமெரிக்க ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனத்தில், அறிவியல் திட்ட தலைவராக பணியாற்றி வருகிறார்.
நீச்சல் போட்டிகளில் சாதித்ததற்காக 2005ம் ஆண்டு ஷிகா டாண்டனுக்கு, 'அர்ஜுனா விருது' அறிவிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கையால் விருது பெற்றார்.