தேசிய கொடிக்கு 21 முறை சல்யூட் செய்த பாக்., ஆதரவாளர்
தேசிய கொடிக்கு 21 முறை சல்யூட் செய்த பாக்., ஆதரவாளர்
UPDATED : அக் 23, 2024 06:27 AM
ADDED : அக் 23, 2024 01:59 AM

போபால்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய நபர், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, தேசியக் கொடிக்கு 21 முறை 'சல்யூட்' அடித்து, 'பாரத் மாதா கி ஜே' என முழக்கமிட்டார்.
ம.பி.,யின் போபால் மாவட்டத்தில் உள்ள மிஸ்ரோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர், பைசால். இவர், கடந்த மே மாதம் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்டார்.
அதில் நாட்டுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் அவர் முழக்கமிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, பைசாலை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, ம.பி., உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி டி.கே.பாலிவால், மிஸ்ரோடு போலீஸ் ஸ்டேஷனில், இந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை, ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் நான்காவது செவ்வாய் கிழமைகளில் தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து, 'பாரத் மாதா கி ஜே' என முழக்கமிடும்படி நிபந்தனை விதித்து, பைசாலுக்கு ஜாமின் வழங்கினார்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அக்டோபர் மாதத்தின் நான்காவது செவ்வாய் கிழமையான நேற்று, மிஸ்ரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு பைசால் வந்தார். அங்கு, மூவர்ணக் கொடிக்கு 21 முறை சல்யூட் அடித்த அவர், பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டார்.