வீடுகளில் கழிப்பறைக்கு வரியா? மறுக்கிறார் ஹிமாச்சல் முதல்வர்
வீடுகளில் கழிப்பறைக்கு வரியா? மறுக்கிறார் ஹிமாச்சல் முதல்வர்
ADDED : அக் 05, 2024 01:28 AM

சிம்லா, ''ஹிமாச்சல பிரதேசத்தில் வீடுகளில் உள்ள ஒவ்வொரு கழிப்பறைக்கும் மாதந்தோறும் தலா 25 ரூபாய் வரி வசூலிக்கப்பட உள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை,'' என மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சலில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தில், நகர்ப்புற வீடுகளில் உள்ள கழிப்பறைக்கும் வரி விதிக்க உள்ளதாகவும், ஒரு கழிப்பறைக்கு மாதந்தோறும், 25 ரூபாய் வரி வசூலிக்க அரசு திட்டமிட்டு இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இது, அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், 'நம்ப முடியவில்லை, துாய்மை இந்தியா திட்டத்தை மக்கள் இயக்கமாக பிரதமர் மாற்றி வரும் இந்த நேரத்தில், கழிப்பறைகளுக்கு காங்கிரஸ் அரசு வரி வசூலிப்பது வெட்கக்கேடானது' என, குறிப்பிட்டார்.
பல்வேறு தரப்பினரும் விமர்சிக்க துவங்கினர். விவகாரம் பெரிதானதும், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று கூறியதாவது:
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, அரசு வழங்கும் குடிநீருக்கு கட்டணம் வசூலிக்க மாட்டோம். தண்ணீருக்கு இனி கட்டணம் கிடையாது என, பா.ஜ., வாக்குறுதி அளித்தது.
நாங்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 100 ரூபாய் தண்ணீர் மானியம் அளிக்க முடிவு செய்தோம். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
அந்த தொகையை செலுத்த வசதி உள்ளவர்கள் மட்டுமே செலுத்துகின்றனர். கட்டாயம் ஏதுமில்லை. எங்கள் அரசு கழிப்பறை வரி எதுவும் விதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கூடுதல் தலைமை செயலர் ஓம்கார் சந்த் சர்மா கூறியதாவது:
கழிப்பறை வரி விதிப்பது தொடர்பாக, மாநில அரசு கடந்த மாதம் 21ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
அதில், மாநகராட்சி அமைத்துள்ள சாக்கடை வசதியை பயன்படுத்துவோர், தண்ணீர் வரியில் 30 சதவீதம் கழிப்பறை வரியாக செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், சில ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் சொந்தமாக தண்ணீர் வசதி செய்துள்ளன. அவர்களிடம் மட்டும், ஒரு கழிப்பறைக்கு 25 ரூபாய் என வரி விதிக்கப்பட்டது.
ஆனால், இந்த வரிவசூல் சரியாக இருக்காது என துணை முதல்வர் கருதியதால், எண்ணிக்கை அடிப்படையில் கழிப்பறை வரி வசூல் செய்யும் முடிவு கைவிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.