குழுவாக கூடி அடிக்கடி ஆலோசனை அமைச்சர்களுக்கு மேலிடம் எச்சரிக்கை
குழுவாக கூடி அடிக்கடி ஆலோசனை அமைச்சர்களுக்கு மேலிடம் எச்சரிக்கை
ADDED : அக் 11, 2024 07:01 AM
பெங்களூரு: முதல்வர் பதவி மீது கண் வைத்து தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி, எதிர்க்கட்சிகள், ஊடகங்களின் வாய்க்கு தீனி போடும் அமைச்சர்கள் மீது, காங்கிரஸ் மேலிடம் எரிச்சல் அடைந்துள்ளது. கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படும்படி நடக்காதீர்கள் என, எச்சரித்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. அரசு அமைந்து ஒன்றரை ஆண்டு ஆன நிலையில், 'முடா' முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, விதிமீறலாக 14 மனைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணைக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்த பின், இவ்வழக்கு சூடு பிடித்தது.
எதிர்பார்ப்பு
முடா வழக்கு அரசியல் மோதலாக மாறியுள்ளது. முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கின்றன.
சித்தராமையா எப்போது ராஜினாமா செய்வார் என, காங்கிரசிலேயே சிலர் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ள அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, மஹாதேவப்பா, பரமேஸ்வர் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.
முடா வழக்கு குறித்து, மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கியுள்ளது.
சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானால், தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என, தலித் சமுதாய அமைச்சர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். ரகசிய கூட்டம் நடத்தி தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர். சித்தராமையா ஆதரவு அமைச்சர்களே, இது போன்று கூட்டம் நடத்துகின்றனர்.
நோக்கம்
இவர்கள் கூட்டம் நடத்துவது, முதல்வர் பதவிக்கு மட்டுமல்ல. கூடுதல் துணை முதல்வர் பதவியை உருவாக்க நெருக்கடி கொடுப்பதும், ரகசிய கூட்டத்தின் நோக்கமாகும்.
இது, துணை முதல்வர் சிவகுமாருக்கும் தலைவலியாக உள்ளது. அமைச்சர்களின் ரகசிய கூட்டங்களுக்கு, கடிவாளம் போட வேண்டும் என, காங்., மேலிடத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
எனவே, காங்கிரஸ் முதன்மை செயலர் வேணுகோபால், அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசினார்.
'அமைச்சர்கள் தனித்தனியாக கூட்டம் நடத்துவது, முதல்வர், துணை முதல்வர் பதவி குறித்து பேசுவது சரியல்ல. உங்களின் போக்கு இப்படியே தொடர்ந்தால், மேலிடம் மவுனமாக இருக்காது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்' என எச்சரித்தார்.
அமைச்சர்களும் இனி, தனியாக கூட்டம் நடத்துவதில்லை என, கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று அமைச்சரவை கூட்டம் துவங்குவதற்கு முன், முதல்வர் சித்தராமையா, ரகசிய கூட்டம் நடத்தும் அமைச்சர்களை கண்டித்தார்.
'உணவு, சிற்றுண்டி பெயரில் தனி ஆலோசனை கூட்டம் நடத்தாதீர்கள். முடா வழக்கு, அரசுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
நான் இன்னும் முதல்வர் பதவியில் தான் இருக்கிறேன். முதல்வர் பதவி குறித்து, பகிரங்கமாக பேசாதீர்கள்' என, எச்சரித்ததாக கூறப்படுகிறது.