மொத்தம் இருப்பது 749 பேர்; சொத்துக்கணக்கு தந்தது 98 பேர்!
மொத்தம் இருப்பது 749 பேர்; சொத்துக்கணக்கு தந்தது 98 பேர்!
ADDED : செப் 28, 2024 11:41 AM

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள 25 ஐகோர்ட்களில் பணியாற்றும் 749 நீதிபதிகளில் 98 பேர் மட்டுமே தங்களது சொத்து விவரத்தை இணையதளத்தில் பதிவேற்றி உள்ளனர்.
உத்தரவு
கடந்த 1997 மே 7ல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஜேஎஸ் வர்மா தலைமையில் நடந்த கூட்டத்தில், அனைத்த நீதிபதிகளும், தங்களது பெயரிலும், மனைவி மற்றும் குழந்தைகள் பெயரிலும் உள்ள சொத்துகள், முதலீடு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
பிறகு 2009 ஆக.,28 ல், டில்லி ஐகோர்ட் முழு அமர்வும் இதேபோன்று தீர்மானம் நிறைவேற்றியது. அந்த ஆண்டு செப்., 8 ல் அனைத்து நீதிபதிகளும் சொத்து விவரத்தை அக்.,31க்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
55 முன்னாள் நீதிபதிகள்
தொடர்ந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிறகு 2009ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களின் சொத்துகள் குறித்த விவரத்தை இணையதளத்தில் வெளியிட்டனர். இதனை பின்பற்றி பல மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளும் இணையதளங்களில் சொத்து விவரங்களை வெளியிட்டு வந்தனர். ஆனால், 2018 மார்ச்சுக்கு பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் குறித்த பட்டியல் புதுப்பிக்கப்படவில்லை. மேலும் சில மாதங்களுக்கு முன்பு வரை 55 முன்னாள் நீதிபதிகளின் விவரங்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தது.
7 ஐகோர்ட் நீதிபதிகள்
இதனிடையே நாடு முழுவதும் 25 மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்களில் 749 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 98 பேர் மட்டுமே இந்தாண்டு சொத்து விவரத்தை வெளியிட்டு உள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 13 சதவீதம் மட்டுமே ஆகும்.
கேரள ஐகோர்ட்டில் உள்ள 39 நீதிபதிகளில் 37 பேரும்
பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஐகோர்ட்டில் 55 பேரில் 31 பேரும்
டில்லி ஐகோர்ட்டில் 39 பேரில் 11 பேரும் சொத்து விவரத்தை வெளியிட்டு உள்ளனர்.
இவர்களுடன் ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் இந்த பட்டியலில் உள்ளனர்.
மேற்கண்ட 7 ஐகோர்ட் இணையதளங்களில் சொத்து விவரம் வெளியிட்ட நீதிபதிகளின் பெயர் இடம்பெறவில்லை.
இதில், நீதிபதிகளின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. சொத்துகளின் உரிமையாளர்கள், பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு, பிக்சட் டெபாசிட், பாண்டுகள், காப்பீடுகள் உள்ளிட்ட விவரங்கள், வங்கி கடன், தங்களிடம் உள்ள நகைகள் குறித்த பட்டியலையும் வெளியிட்டு உள்ளனர்.
பதில்
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு ஐகோர்ட்கள் கீழ்கண்டவாறு பதிலளித்து உள்ளன.
*தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ' தகவல்' என்ற வரையறைக்குள் நாங்கள் வரவில்லை என அலகாபாத் மற்றும் மும்பை ஐகோர்ட்கள் பதிலளித்து உள்ளன.
*தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நீதிபதிகளின் சொத்துகள் குறித்த விவரத்தை வெளியிடுவதற்கு எதிராக கடந்த 2012 மார்ச் 6 ல் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக உத்தரகண்ட் ஐகோர்ட் கூறியுள்ளது.
*தனிநபர் தகவல்களை வெளியிடுவதில் பொது நலன் இருப்பதாக பார்க்கவில்லை என குஜராத் ஐகோர்ட் கூறியுள்ளது.
*சொத்துகளை வெளியிடுவது என்பது ரகசியமானது. அதை பொது வெளியில் வெளியிட முடியாது என ஆந்திர ஐகோர்ட் கூறியுள்ளது.
*தெலுங்கானா ஐகோர்ட் கூறியதாவது: தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் சொத்துகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுவது என்பது சுப்ரீம் கோர்ட் தீர்மானத்தின்படி ரகசியமானது என தெரிவித்து உள்ளது.
*சுப்ரீம் கோர்ட்டின் தீர்மானத்தின்படி, நீதிபதிகளின் சொத்துகளை வெளியிடுவது என்பது கட்டாயமில்லை என கவுகாத்தி ஐகோர்ட் கூறியுள்ளது.
*நீதிபதிகள் சொத்து குறித்த விவரம் தங்களிடம் இல்லை சிக்கிம் ஐகோர்ட் கூறியுள்ளது.