ADDED : நவ 09, 2024 11:10 PM

மைசூரு: ரயில் பயணியரின் வசதிக்காக தென்மேற்கு ரயில்வே மைசூரு பிரிவு, மைசூரு அருகிலுள்ள வொன்டிகொப்பாலில் ரயில் பெட்டி உணவகத்தைத் திறக்க உள்ளது.
தென்மேற்கு ரயில்வே மைசூரு பிரிவு சார்பில் ரயில் பெட்டி உணவகம், மைசூரு யாதவகிரியில் உள்ள ரயில்வே அருங்காட்சியகம் அருகில் உள்ளது. இத்திட்டத்தை விரிவுபடுத்த, தென்மேற்கு ரயில்வே மைசூரு பிரிவு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே கோட்ட வணிக மேலாளர் கிரிஷ் தர்மராஜா கூறியதாவது:
வொன்டிகொப்பால் போலீஸ் நிலையம் எதிரில், சுவாமி விவேகானந்தா பூங்காவில், ரயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர், வரும் 13ம் தேதி காலை 11:00 மணிக்கு ஆன்லைன் மூலம் நடக்கிறது.
இதில், ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட விருப்பப்படுவோர் பங்கேற்கலாம். பிராட்கேஜ் ரயில் பெட்டிக்குள் 'ஏசி' வசதியுடன் உணவகம் நடத்த வேண்டும்.
இது தொடர்பாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படும். ஆர்வம் உள்ளோர், www.ireps.gov.in என்ற இணையதளத்தில் தகவல் தெரிந்து கொள்ளலாம்.
விவேகானந்தா பூங்காவிற்குள் ரயில் கோச் உணவகம் அமைக்க, ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஏலம் எடுப்போரிடம், ரயில் பெட்டி ஒப்படைக்கப்படும். இதை அவர்கள், தங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம். மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
உணவு கட்டணத்தை, ஒப்பந்ததாரர்களே முடிவு செய்யலாம்.
ஒரு பெட்டியில் 30 முதல் 40 பேர் அமர்ந்து சாப்பிடலாம். உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக மாறும். இதேவேளையில், பூங்காவை சீர்குலைக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. மீறினால், உரிமம் ரத்து செய்யப்படும்.
நாடு முழுதும் 70 ரயில் பெட்டி உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மைசூரில் இத்திட்டம் வெற்றி பெற்றால், தாவணகெரே, ஷிவமொக்காவிலும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவேகானந்தா பூங்காவில் ரயில் பெட்டி உணவகம் அமைப்பதற்காக போடப்பட்டுள்ள தண்டவாளம்.