பண பையுடன் மஹா., அமைச்சர் 'வீடியோ' வெளியானதால் பரபரப்பு
பண பையுடன் மஹா., அமைச்சர் 'வீடியோ' வெளியானதால் பரபரப்பு
ADDED : ஜூலை 12, 2025 02:15 AM

மும்பை: வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய மறுநாள், மஹாராஷ்டிரா அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத், சிகரெட் புகைத்தபடி பணப் பையுடன் அமர்ந்திருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
வருமான வரித்துறை
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பைச் சேர்ந்த சஞ்சய் ஷிர்சாத், மாநில சமூக நீதித் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
அவுரங்காபாத் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான இவர், 2024 சட்டசபை தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 35 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2019 சட்டசபை தேர்தலில், 3.30 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக சஞ்சய் ஷிர்சாத் தெரிவித்த நிலையில், ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு சொத்துக்கள் அதிகரித்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி, சமீபத்தில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரம் மாநில அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், அறையில் அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் சிகரெட் புகைப்பதும், அருகில் பையில் பணம் கட்டுக்கட்டாக இருப்பது போன்றும், சமூக வலைதளத்தில் நேற்று வீடியோ வெளியானது.
பரிதாபம்
இந்த வீடியோவை பகிர்ந்து, ராஜ்யசபா எம்.பி.,யும், உத்தவ் சிவசேனா மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் கூறுகையில், ''முதல்வர் தேவேந்திர பட்னவிசை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. தன் நற்பெயர் கெடுக்கப்படுவதை பார்த்து, அவர் இன்னும் எத்தனை காலத்துக்கு அமைதியாக இருக்கப் போகிறார்? உதவியற்றவருக்கு மறுபெயர் பட்னவிஸ்,'' என்றார்.
வீடியோவில் காணப்படுவது என் வீடு தான். வெளியூரில் இருந்து அப்போது தான் வந்து ஆடைகளை மாற்றி ஓய்வெடுத்தேன். பையில் இருப்பது ரொக்கம் அல்ல; துணிகள். பணமாக இருந்தால், பீரோவில் வைத்திருக்க மாட்டேனா? யாராவது பணத்தை திறந்தவெளியில் வைப்பரா?
- சஞ்சய் ஷிர்சாத்
மஹா., அமைச்சர், சிவசேனா