ஒரு வாரம் பெய்த கனமழையால் தாஜ்மஹாலின் சுவர்களில் விரிசல்
ஒரு வாரம் பெய்த கனமழையால் தாஜ்மஹாலின் சுவர்களில் விரிசல்
ADDED : செப் 23, 2024 01:05 AM

ஆக்ரா: உத்தர பிரதேசத்தில், கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற தாஜ்மஹாலின் சுவர்கள் மற்றும் பிற பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுஉள்ளன.
உ.பி.,யின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், நம் நாட்டின் நினைவுச்சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதை உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய தலமாக, 'யுனெஸ்கோ' அங்கீகரித்துள்ளது.
சமூக வலைதளம்
சுற்றுலா தலமான தாஜ்மஹாலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் வருகை தருகின்றனர்.
ஆக்ரா உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த வாரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால், தாஜ்மஹால் வளாகத்தை மழைநீர் சூழ்ந்தது. இடைவிடாது பெய்த மழையால் தாஜ்மஹாலின் மேற்கூரைகளில் இருந்து மழைநீர் கசிந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் பெய்த பலத்த மழையால், தாஹ்மஹாலின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. பிரதான குவிமாடத்தைச் சுற்றியுள்ள கதவுகளில், அரபு மொழியில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் தேய்ந்து விட்டன.
மேலும், பல்வேறு சுவர்கள் சேதமடைந்துள்ளன. ஷாஜஹான் கல்லறையின் மையக் குவிமாடத்தின் சுவர்களில் செடி முளைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது.
இது குறித்து, சுற்றுலா வழிகாட்டிகள் நலச்சங்க தலைவர் தீபக் டான் கூறுகையில், “தாஜ்மஹால் நினைவுச்சின்னத்தில் கட்டமைப்பு பிரச்னைகள் எதுவும் இல்லை என, இந்திய தொல்லியல் துறை எப்படி கூற முடியும்?
நெகட்டிவ் விளம்பரம்
“இதை பராமரிக்க போதுமான நிதி செலவிடப்படுவதில்லை. எந்தவொரு நெகட்டிவ் விளம்பரமும், தாஜ்மஹாலின் இமேஜை சீர்குலைக்கும்,” என்றார்.
இதற்கு பதிலளித்து, இந்திய தொல்லியல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், 'தொடர் கனமழையால் தாஜ்மஹாலின் மேற்கூரைகளில் இருந்து நீர் கசிந்தது உண்மை தான். இந்த பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது.
'தாஜ்மஹால் கட்டமைப்பில் உண்மையில் எந்த பிரச்னையும் இல்லை. மையக் குவிமாடத்தின் மீது வளர்ந்திருந்த செடி அகற்றப்பட்டு விட்டது. இதில், பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என்றார்.