ADDED : அக் 11, 2024 10:59 PM
பாலக்காடு : பாலக்காடு அருகே, தனியார் பஸ்சில் பெண்ணை வெட்டிய சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், புதுக்கோடு அஞ்சுமுறி பகுதியைச் சேர்ந்தவர் ஷமீரா. இவர், நேற்று காலை, 9:30 மணிக்கு, காரப்பொற்றை வழி பழயன்னூருக்கு சென்ற பஸ்சில் பயணித்தார். அப்போது, மாட்டுவழி என்ற ஸ்டாப்பில், பஸ்சில் ஏறிய அப்பகுதியை சேர்ந்த மதன்குமார், 42, என்பவர், ஷமீராவை தன் கையில் பதுக்கி வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் காயமடைந்த இவரை, பஸ்சில் இருந்த பயணியர் மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பியோட முயன்ற மதன்குமாரை, மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, வடக்கஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர். பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள முன்விரோதம் காரணம் ஷமீராவை மதன்குமார் தாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

