ADDED : டிச 11, 2024 11:39 PM

சித்ரதுர்கா : அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் உயிரிழந்தார். டாக்டரின் அலட்சியமே காரணம் என குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
சித்ரதுர்கா செல்லகெரே அருகே ஜகுனுரஹட்டி கிராமத்தில் வசிப்பவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரோஜா, 25. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
பிரசவத்திற்காக சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்கும் என்று டாக்டர் ரூபா ஸ்ரீ கூறியிருந்தார்.
கடைசி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றார். இதற்கு ரோஜாவின் குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர். அறுவை சிகிச்சை மூலம் ரோஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
வீட்டிற்கு சென்ற நாளிலிருந்து வயிற்றில் தையல் போடப்பட்ட பகுதியில் ரோஜாவுக்கு வலி ஏற்பட்டது. ஆனாலும் அவர் மருத்துவமனைக்கு செல்லவில்லை.
வயிற்றில் காயம் ஏற்பட்டதால் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் ரோஜா உயிரிழந்தார்.
அறுவை சிகிச்சை செய்த பின், டாக்டர் ரூபாஸ்ரீ சரியாக தையல் போடவில்லை. இதனால், வயிற்றில் காயம் ஏற்பட்டு ரோஜா இறந்துவிட்டதாக, அவரது கணவர் வெங்கடேஷ் குற்றஞ்சாட்டினார். மேலும் ரூபாஸ்ரீ மீது போலீசில் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.