கணிதம் கற்க கஷ்டப்பட்டவர் ஜெர்மனியில் பிஎச்.டி., மாற்றுத்திறனாளி ஆசியால் முன்னுக்கு வந்த பெண்
கணிதம் கற்க கஷ்டப்பட்டவர் ஜெர்மனியில் பிஎச்.டி., மாற்றுத்திறனாளி ஆசியால் முன்னுக்கு வந்த பெண்
ADDED : நவ 09, 2024 11:08 PM

படிப்பில் சிறந்து விளங்குபவர்கள் கூட சில நேரங்களில் கணிதத்தில் கோட்டை விடுவர். மற்ற பாடங்களை விட கணிதம் படிப்பது மிகவும் கடினம் என்பது, பெரும்பாலான மாணவர்களின் எண்ணமாக உள்ளது.
இந்த கணித பாடம் ஏன் தான் இருக்கிறதோ... இதிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லையா என்று நினைக்கும் மாணவர்களும் உண்டு.
தங்கள் குழந்தைகளுக்கு மற்ற பாடங்களை ஆர்வமாக சொல்லிக் கொடுக்கும் பெற்றோரில் சிலருக்கும் கூட, கணிதம் பெரிய அளவில் தெரிவதில்லை. இதனால் கணிதத்திற்கு என்றே தங்கள் பிள்ளைகளை டியூஷனுக்கும் அனுப்புகின்றனர்.
வெறுப்புடன்...
பெற்றோர் டியூஷன் சேர்த்துவிட்டனரே... வேறு வழியே இல்லை; கணிதம் படித்துத் தான் ஆக வேண்டும் என்று ஒருவித வெறுப்புடன் படிக்கும் மாணவர்களும் ஏராளம். ஆனால் பள்ளி மாணவர்களுக்கு கணிதம் மீது இன்ஜினியர் ஒருவர் விருப்பம் ஏற்படுத்துகிறார்.
பெங்களூரு ஹெப்பாலைச் சேர்ந்தவர் மகேஷ். நடக்க முடியாத மாற்றுத்திறனாளியான இவர், இன்ஜினியர் ஆவார். இவர் தான் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் விதத்தில், கணித பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.
புத்தி இருப்பவரே...
இதுபற்றி மகேஷ் கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் வலிமை இருப்பவரே, இந்த சமூகத்தில் பிழைக்க முடியும் என்று சொல்வர். இன்றைய காலகட்டத்தில் புத்தி இருப்பவரே பிழைக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.
கணித பாடம் கடினமாக இருக்கலாம். ஆனால் புத்தியுடன் அதை படித்தால், மற்ற பாடங்களை விட மிகவும் எளிதாக இருக்கும்.
நான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். உடல் ஊனமும், சரியான வழிகாட்டுதல் இல்லாமையும் எனக்கு சிறுவயதில் பெரிய சவாலாக இருந்தது.
கஷ்டப்பட்டு பள்ளி படிப்பை முடித்து, இன்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்து தேர்ச்சி பெற்றேன். கல்லுாரி படிக்கும் காலத்தில் பாக்கெட் மணியாக பணம் வேண்டும் என்பதால், ஐந்து குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தேன்.
அப்போது ஷாலினி என்ற பெண்ணின் தாய், 'எனது மகளுக்கு கணிதமே வரவில்லை. அவரை எப்படியாவது பத்தாம் வகுப்பு 'பாஸ்' செய்ய வைத்து விடுங்கள். பின், அவரை திருமணம் செய்து கொடுத்து விடுகிறேன்' என, என்னிடம் கூறினார்.
நானும், ஷாலினிக்கு கணித பாடம் சொல்லிக் கொடுத்தேன். கணிதத்தின் எளிமையான நுணுக்கங்களால், ஷாலினிக்கு கணிதம் மீது ஆர்வம் ஏற்பட்டது.
நன்றாக படித்து அவர் பத்தாம் வகுப்பு பாஸ் செய்துவிட்டார். இப்போது ஜெர்மனியில் கணிதத்தில் பி.எச்.டி., படிக்கிறார்.
என்னிடம் தற்போது ஏராளமான மாணவர்கள் கணித வகுப்பு டியூஷனுக்கு வருகின்றனர். சிறுவயதில் எனக்கு ஆசிரியர்கள் இப்படித்தான் கணிதம் சொல்லித் தர வேண்டும் என்று நிறைய ஆசைப்பட்டேன். அது நடக்கவே இல்லை.
என் ஆசை
நான் கண்ட ஆசையை, என்னிடம் டியூஷன் படிக்கும் மாணவர்கள் மூலமாக நிறைவேற்றி வருகிறேன். மாணவர்களுக்கு எண் கணிதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
கணிதம் மிகவும் எளிமையான பாடம் என்று மாணவர்களை நம்ப வைக்கிறேன். பிரக்னா மத் என்ற அமைப்பை துவங்கி, ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்
-- நமது நிருபர் -.