ADDED : மார் 05, 2024 07:05 AM

ஹாசன்: காட்டு யானையிடம் இருந்து, நுாலிழையில் தொழிலாளி உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
மலைநாடு பகுதி என்று அழைக்கப்படும், ஹாசன் மாவட்டத்தில் சக்லேஸ்பூர், ஆலுார், பேலுார் தாலுகாக்களில் உள்ள கிராமங்களில், காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
காபி தோட்டம், விவசாய நிலங்களில் புகுந்து, அங்கு வேலை செய்பவர்களை, யானைகள் தாக்கிக் கொல்கின்றன. இதனால் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சக்லேஸ்பூர் அருகே கேசகுலி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டின் முன்பு உள்ள விவசாயத் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை, தொழிலாளி ஒருவர் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த தோட்டத்திற்குள் காட்டு யானை நுழைந்தது.
யானையை பார்த்ததும், வளர்ப்பு நாய் குரைத்தது. ஆனால் அதை கண்டு கொள்ளாமல், தொழிலாளி வேலை செய்து கொண்டு இருந்தார். அவரை நோக்கி யானை வந்தது. யானை அருகில் வந்ததும், தொழிலாளி அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தார். அவரை யானை விரட்டியது. தும்பிக்கையால் தாக்க முயன்றது.
அதிர்ஷ்டவசமாக தப்பி ஓடி உயிர் பிழைத்தார். பண்ணை வீட்டின் கதவை, தொழிலாளி தட்டினர். கதவு திறக்கப்படாதால், வீட்டின் முன்பு நின்ற காருக்கு அடியில் சென்று பதுங்கிக் கொண்டார். யானை அங்கிருந்து சென்றதும், வெளியே வந்தார்.
யானை தோட்டத்தில் புகுந்தது, தொழிலாளியை விரட்டியது, உயிர்தப்பிக்க காருக்கு அடியில் தொழிலாளி பதுங்கிய காட்சிகள், வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது, சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

