ADDED : டிச 29, 2024 11:45 PM
மாண்டியா: கர்நாடகாவில், ஜெலட்டினை உடலில் கட்டி, காதலி வீட்டு முன் வெடிக்க செய்து, வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்தவர் ராமசந்துரு, 21. இவரும், இதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஓராண்டுக்கு முன் ஊரை விட்டு ஓடினர்.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, விசாரணை நடத்திய போலீசார், இருவரையும் கண்டுபிடித்து அழைத்து வந்தனர். சிறுமியை கடத்திச் சென்றதாக, ராமசந்துரு மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவானது.
இதனால், ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார். அதன்பின் இரண்டு குடும்பங்களுக்கு இடையே சமாதான பேச்சு நடந்தது.
புகாரை சிறுமியின் குடும்பத்தினர் வாபஸ் பெற்றதால், ராமசந்துரு விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் காதலியை பார்க்க, பலமுறை முயற்சித்தும் முடியவில்லை; போன் செய்தும் எடுக்கவில்லை.
இதனால் விரக்தியான ராமசந்துரு, நேற்று முன் தினம் இரவு, தன் உடலில் ஜெலட்டின் குச்சிகளை கட்டிக் கொண்டு, காதலியின் வீட்டு முன் சென்று, வெடிக்க வைத்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
போலீசார் கூறுகையில், 'தற்கொலை செய்த இளைஞர், பாறைகளை தகர்க்க பயன்படுத்தும் ஜெலட்டினை உடலில் கட்டி, அதை வெடிக்க வைத்துள்ளார்' என்றனர்.