ADDED : ஏப் 25, 2026 12:15 AM
ராய்ச்சூர்: சுற்றுலா சென்றிருந்த இளைஞர், ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனுாரின், கசபா லிங்கசகூரு கிராமத்தில் வசித்தவர் சுமந்த் குமார், 19. இவர் மூன்று நாட்களுக்கு முன், தன் நண்பர்களுடன், உத்தரகன்னட மாவட்டம், தண்டேலிக்கு சுற்றுலா சென்றிருந்தார். பல இடங்களை பார்த்து விட்டு, நேற்று முன்தினம் ஹூப்பள்ளியில் இருந்து, சிந்தனுாருக்கு ரயிலில் திரும்பி கொண்டிருந்தனர்.
சிந்தனுாரில் ரயில் நின்றதும், நண்பர்கள் இறங்கிய போது, சுமந்த் குமார் ரயிலில் இல்லாததை கவனித்தனர். பீதியடைந்த நண்பர்கள், அவரை தேடி சென்றனர்.
சிந்தனுாருக்கு ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள, சாசலமரி கேம்ப் அருகில், சுமந்த் குமாரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
இது குறித்து, தகவலறிந்த ராய்ச்சூர் ரயில்வே போலீசார், உடலை மீட்டு விசாரணையை துவக்கினர்.
