ADDED : ஆக 20, 2025 10:26 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொழிஞ் சாம்பாறை கரம்பொற்றை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ், 42.
திருமணமாகாத இவர் தனித்து வாழ்ந்தார். அவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அந்த பெண்ணின் வீட்டிற்கு சந்தோஷ் சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த, அப்பெண்ணின் கணவர் மூங்கில்மடையை சேர்ந்த ஆறுச்சாமிக்கும், 45, சந்தோஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, சந்தோஷை சரமாரியாக தாக்கி, அங்குள்ள 'டிவி' கேபிள் ஒயரால், கழுத்து நெறித்து கொலை செய்துள்ளார். இதைக்கண்டு பதறிப்போன அப்பெண், அங்கிருந்து தப்பி கொழிஞ்சாம்பாறை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து, சித்தூர் டி.எஸ்.பி., கிருஷ்ணதாஸ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, ஆறுச்சாமியை கைது செய்தனர்.