'இன்ஸ்டாகிராம்' காதலியை மணமுடிக்க துபாயிலிருந்து வந்து ஏமாந்த இளைஞர்
'இன்ஸ்டாகிராம்' காதலியை மணமுடிக்க துபாயிலிருந்து வந்து ஏமாந்த இளைஞர்
ADDED : டிச 07, 2024 11:56 PM

சண்டிகர்: 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் மூன்று ஆண்டுகளாக பழகி வந்த பெண்ணை மணமுடிப்பதற்காக துபாயிலிருந்து இருந்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்தார்.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் அருகே உள்ள மண்டியலி கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் குமார், 24. துபாயில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், பஞ்சாபின் மோகாவைச் சேர்ந்த மன்ப்ரீத் கவுர் என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் வாயிலாக நட்பு ஏற்பட்டது.
மன்ப்ரீத் கவுரை நேரில் சந்திக்காமலேயே, கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார் தீபக். இந்நிலையில், திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மன்ப்ரீத் கவுரின் பெற்றோரிடமும் மொபைல் போனில் பேசி சம்மதம் வாங்கினார்.
அவர்கள், திருமண ஏற்பாட்டிற்கு பண பற்றாக்குறை இருப்பதாக கூறி 50,000 ரூபாயை அனுப்பும்படி தீபக்கிடம் கேட்டுள்ளனர்.
அவரும் பணத்தை அனுப்பி உள்ளார். டிச., 6 என திருமண தேதி குறிக்கப்பட்டது.
இதையடுத்து மணமகன் தீபக், தன் நண்பர்கள், உறவினர்கள், போட்டோ, வீடியோகிராபர்கள் என, 150 பேருடன் நேற்று முன்தினம் மோகாவுக்கு வந்திறங்கினார்.
ஆனால் மாப்பிள்ளை வீட்டாரை அழைத்துச் செல்ல மணப்பெண் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. அவர்களுக்கு போன் செய்த போது 'ஸ்விட்ச் ஆப்' என வந்து உள்ளது.
திருமணம் நடக்க உள்ள 'ரோஸ் கார்டர்ன் பேலஸ்' முகவரி குறித்து உள்ளூர் மக்களிடம் விசாரித்துள்ளனர். ஆனால், அப்படி ஒரு இடமே மோகாவில் இல்லை என்பது தெரிய வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தீபக், இதுகுறித்து மோகா போலீசில் புகாரளித்தார்.
அவர்கள் விசாரித்து வருகின்றனர்.