ADDED : பிப் 28, 2024 12:55 AM
புதுடில்லி, உடல் வலிமை பெறுவதற்காக, காசுகளையும், மேக்னட் எனப்படும் காந்தத்தையும் விழுங்கிய இளைஞரின் வயிற்றில் இருந்து, 39 காசுகள் மற்றும் 37 காந்தங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
புதுடில்லியைச் சேர்ந்த, 26 இளைஞர் ஒருவர், அடிக்கடி வாந்தி எடுப்பது மற்றும் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய உடலைப் பரிசோதனை செய்து பார்த்தபோது, டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவருடைய வயிற்றில் காசுகளும், காந்தங்களும் இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை வாயிலாக அவை வெளியே எடுக்கப்பட்டன. இவ்வாறு, 39 காசுகளும், 37 காந்தங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து டாக்டர்கள் கூறியுள்ளதாவது:
அந்த இளைஞர் உடல் வலிமை பெறுவதற்காக, காசுகளை முழுங்கியுள்ளார். அந்த காசுகளில், 'ஜிங்க்' எனப்படும் துத்தநாகம் இருப்பதால், உடல் வலிமை பெறும் என்று நினைத்துள்ளார்.
அந்த காசுகள் வயிற்றிலேயே தங்கியிருப்பதற்காக, காந்தங்களையும் முழுங்கியுள்ளார். இதனால், உணவுப் பாதையில் அவை சிக்கிக் கொண்டு, சாப்பிட முடியாமல், வாந்தி எடுப்பது, வயிற்று வலியால் அவதிப்பட்டார்.
இவர் மனநலக் கோளாறுக்காக ஏற்கனவே சிகிச்சை எடுத்து வருகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

