UPDATED : பிப் 06, 2024 04:04 AM
ADDED : பிப் 06, 2024 12:16 AM

புதுடில்லி: ஆதாருடன், பான் எண்ணை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குபின் இணைத்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் வாயிலாக, 600 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'வருமான வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் ஆதாருடன், பான் எனப்படும், நிரந்தர வருமான வரிக்கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இறுதி வாய்ப்பாக, 2023 ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த தேதிக்குள் ஆதார் -- பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு மேல் அவகாசம் அளிக்கப்படாது எனவும் அவ்வாறு, இணைக்காதவர்களின் பான் எண், செயலற்றதாகிவிடும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. எனினும், அதன்பின், 1,000 ரூபாய் அபராதமாக செலுத்தி, மீண்டும் அவற்றை பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
இதுதொடர்பாக, லோக்சபாவில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருந்ததாவது:
கடந்த ஜன., 29ம் தேதி நிலவரப்படி, ஆதாருடன் - பான் எண்ணை இதுவரை, 11.48 கோடி பேர் இணைக்கவில்லை. இவற்றை, 1,000 ரூபாய் அபராத தொகையுடன் தாமதமாக பலர் இணைத்து வருகின்றனர். கடந்த ஜன., 31ம் தேதி நிலவரப்படி, இதன் வாயிலாக 601.97 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.