ADDED : நவ 23, 2025 09:13 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் சாலையோரத்தில் ஏராளமான ஆதார் அட்டைகள் வீசப்பட்டன. இதற்கு ஊடுருவல்காரர்களின் தலைநகரமாக மேற்கு வங்கம் திகழ்கிறது என்று பாஜ விமர்சித்துள்ளது.
கோல்கட்டாவில் சால்ட் லேக் பகுதியில் எப்போதும் போல் பலர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாலையோரம் ஏராளமான ஆதார் அட்டைகள் குவியல், குவியல்களாக காணப்பட்டன.
இந்த அட்டைகளில் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் முகவரிகள் இடம்பெற்றுள்ளன. யார், எதற்காக இந்த ஆதார் அட்டைகளை இங்கே கொண்டு வந்து வீசினார்கள் என்று தெரியவில்லை. இதேபோல துணை நகரத்தின் அருகே வயல்வெளி ஒன்றிலும் ஆதார் அட்டைகளை அங்குள்ளோர் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து அங்குள்ளோர் பிதான்நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதார் அட்டைகள் சாலையோரம் கொட்டப்பட்டதை அறிந்த பாஜவினர் மேற்கு வங்க அரசை விமர்சித்தனர். ஊருவல்காரர்களின் தலைநகரம் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது என்றும் அவர்கள் கருத்து கூறி உள்ளனர்.

