ADDED : ஜூலை 17, 2025 10:11 PM
புதுடில்லி:டில்லியில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் மகளிர் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 'பிங்க் டிக்கெட்' என்ற பெயரில் இந்த திட்டம் தற்போது அமலில் உள்ளது. இந்த திட்டத்தால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து, இழப்பை குறைக்கும் வகையில், டில்லியில் வசிக்கும் பெண்கள் மட்டுமே பயனடையும் வகையில் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:
தற்போது அமலில் உள்ள, 'பிங்க் டிக்கெட்' என்ற திட்டத்துக்கு பதிலாக, 'பிங்க் பாஸ்' என்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, பஸ்சில் இலவமாக பயணிக்கும் பெண்கள், தங்கள் ஆதார் கார்டை, போக்குவரத்து அலுவலகத்தில் காட்டி, 'பிங்க் பாஸ்' பெற்றுக் கொள்ள வேண்டும். டில்லியில் வசிக்கும் பெண்கள் மட்டுமே பயன்பெற முடியும். விரைவில் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆதார் கார்டில் டில்லி முகவரி இருப்பவர்களுக்கு மட்டுமே, 'பிங்க் பாஸ்' வழங்கப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து டில்லி போக்குவரத்து அமைச்சர் பங்கஜ் சிங் கூறியதாவது:
'பிங்க் பாஸ்'திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். அதுவரை 'பிங்க் டிக்கெட்' திட்டத்தின்கீழ் பயணம் செய்யலாம். புதிய திட்டம் அமலுக்கு வந்தபின், அதில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.