ஆயுள் முடிந்த 47 லட்சம் வாகனங்களை பதிவு நீக்காத ஆம் ஆத்மி அரசு: முதல்வர்
ஆயுள் முடிந்த 47 லட்சம் வாகனங்களை பதிவு நீக்காத ஆம் ஆத்மி அரசு: முதல்வர்
ADDED : ஏப் 01, 2025 09:19 PM
புதுடில்லி:'தலைநகர் டில்லியில் மோசமான காற்று மாசுக்கு காரணம், மாசுக் கட்டுப்பாட்டு வழிமுறைகளில் உள்ள குறைபாடுகள், தரக்கட்டுப்பாடு சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு, நம்பகத்தன்மையற்ற காற்று தர கண்காணிப்பு மையங்கள் தான்' என சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டில்லியில் காற்று மாசுபாடு குறித்த, சி.ஏ.ஜி., அறிக்கையை, முதல்வர் ரேகா குப்தா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்து பேசியதாவது:
அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி, கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோ கார்பன்களை வெளியேற்றிய 1.8 லட்சம் வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே, மாசுக் கட்டுப்பாட்டு வரம்புகளை மீறி, 4,000 டீசல் வாகனங்களுக்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அதிகளவில் புகை வெளியான போதிலும் அந்த வாகனங்கள் சாலையில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்கள், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைப்படி அமைக்கப்படவில்லை. இதனால், தினமும் கணக்கெடுக்கப்படும் காற்றித் தரக் குறியீட்டில் உண்மையான அளவு தெரியவில்லை.
கடந்த 2018- - 2019 முதல் 2020- - 2021 வரை பதிவு நீக்கம் செய்யப்பட வேண்டிய 47.51 லட்சம் ஆயுள்காலம் முடிந்த வாகனங்களில், 2.98 லட்சம் வாகனங்கள் மட்டுமே பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவறில் பெரும்பாலான வாகனங்கள் 2021ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி சாலையில் இயங்கும் வகையில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அந்த வாகனங்கள் இன்றும் டில்லி சாலைகளில் இயங்குகின்றன. அதேபோல, 4,000 வாகனங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. .
போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவில், ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், மாசு சோதனை சாதனங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அவர்களிடம் இல்லை. இதனால், விதிமுறை மீறலை கண்டுபிடிக்க முடியவில்லை.
அண்டை மாநிலங்களில் இருந்து டீசல் வாகனங்கள் டில்லிக்குள் நுழைவதைத் தடுக்க தென்மேற்கு மற்றும் வடக்கு நுழைவுப் பகுதிகளில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க உச்ச நீதிமன்றம் 1998ல் பிறப்பித்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால், டீசலில் இயங்கும் அண்டை மாநில பஸ்கள், டில்லி மாநகருக்குள் அமைந்துள்ள சாராய் காலே கான் மற்றும் காஷ்மீரி கேட் பஸ் நிலையத்துக்கு வருகின்றன.
டில்லியின் காற்று மாசுக்கு அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவு எரிப்பது மட்டுமின்றி, டில்லி மாநகருக்குள் காற்று மாசு கட்டுப்பாட்டு மற்றும் அமலாக்கத்தில் அரசு கவனம் செலுத்தவில்லை.
சிறந்த கண்காணிப்பு, கடுமையான மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மேம்பட்ட பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் அவசியம் ஆகியவையும் சி.ஏ.ஜி., அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

