ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா: பாரதிய ஜனதாவில் ஐக்கியம்?
ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா: பாரதிய ஜனதாவில் ஐக்கியம்?
ADDED : நவ 17, 2024 11:43 PM

புதுடில்லி: டில்லி அரசில் போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த ஆம் ஆத்மியின் கைலாஷ் ெகலாட், தன் பதவியை நேற்று ராஜினாமா செய்ததுடன், கட்சியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி, கட்சியிலிருந்தும் விலகினார்.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது.
டில்லி அரசில் போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த கைலாஷ் ெகலாட், தன் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் ஆதிஷிக்கு நேற்று கடிதம் எழுதினார்.
மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் கடிதம் அனுப்பினார்.
அதன் விபரம்:
ஆம் ஆத்மியில் இன்று மக்கள் சேவையை பின்னுக்கு தள்ளி, அரசியல் ஆதாயம் தேடுவது அதிகம் நடக்கிறது. பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
மக்களுக்கான உரிமைகளுக்கு போராடுவதற்கு பதிலாக, சொந்த அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே போராடி வருகிறோம்.
டில்லி அரசு பெரும்பாலான நேரம் மத்திய அரசுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், டில்லியில் முன்னேற்றம் என்பது ஏற்படாது. எனவே, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கைலாஷ் ெகலாட் ராஜினாமா குறித்து டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ''கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு எதிராக பா.ஜ., முன்வைத்த அதே பிரச்னைகளை தான் கைலாஷ் ெகலாட்டும் எழுப்பி, பதவி விலகி உள்ளார்.
''ஆம் ஆத்மி தலைவர்களே கெஜ்ரிவாலை நேர்மையான அரசியல்வாதியாக கருதவில்லை என்பதை ெகலாட்டின் ராஜினாமா நிரூபித்து உள்ளது,'' என்றார்.
இதற்கிடையே, கைலாஷ் ெகலாட் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.