கவுன்சிலர்களை இழுக்க முயற்சி பா.ஜ., மீது ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
கவுன்சிலர்களை இழுக்க முயற்சி பா.ஜ., மீது ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
ADDED : செப் 20, 2024 08:46 PM
புதுடில்லி,:“மாநகராட்சியில் காலியாக உள்ள நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கு முன்பே, ஆம் ஆத்மி கவுன்சிலர்களை தன் பக்கம் இழுக்க பா.ஜ., முயற்சிக்கிறது,” என ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மாநகராட்சி பொறுப்பாளருமான துர்கேஷ் பதக் கூறினார்.
பா.ஜ., கவுன்சிலர் கமல்ஜித் செராவத், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றதையடுத்து, கவுன்சிலர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளை ராஜினாமா செய்தார். இந்தக் காலியிடத்தை நிரப்ப வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநகராட்சி பொறுப்பாருமான துர்கேஷ் பதக் கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பா.ஜ., அநாகரிகமான அரசியல் செய்கிறது. சமீப காலமாக எங்கள் கட்சியினர் பலரை அணுகி, பா.ஜ.,வில் சேர அழுத்தம் கொடுக்கின்றனர்.
நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு முன் ஆம் ஆத்மி கவுன்சிலர்களை பணம் கொடுத்து கட்சி தாவ வைக்க பா.ஜ., முயற்சித்து வருகிறது.
புராரி ஆம் ஆத்மி கவுன்சிலர் சஞ்சீவ் ஜாவை சில நாட்களுக்கு முன் அணுகிய பா.ஜ., கவுன்சிலர் சுந்தர் சிங், பா.ஜ.,வுக்கு மாற இரண்டு கோடி ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை பா.ஜ., மறுக்கவே முடியாது. புராரிக்கு சுந்தர் சிங் வந்து சென்றது கண்காணிப்புக் கேமராவில் பதிவான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிருபர்கள் சந்திப்புக் கூட்டத்தில், சஞ்சீவ் ஜா மற்றும் பவானா வார்டு ஆம் ஆத்மி கவுன்சிலர் ரிது முகேஷ் சோலங்கியின் கணவர் ஆகியோரும் பேசினர்.
சோலங்கியின் கணவர், “நிலைக்குழு உறுப்பினர் தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போடும்படி என் மனைவியை பா.ஜ.,வினர் வற்புறுத்துகின்றனர்,”என்றார்.
நிலைக்குழு உறுப்பினர் தேர்தலில், சைனிக் என்கிளேவ் வார்டு ஆம் ஆத்மி கவுன்சிலர் நிர்மலா குமாரி, பா.ஜ.,வை எதிர்த்து போட்டியிடுகிறார்.