பா.ஜ.,வுடன் தேர்தல் ஆணையம் கைகோர்ப்பு ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு
பா.ஜ.,வுடன் தேர்தல் ஆணையம் கைகோர்ப்பு ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு
ADDED : டிச 10, 2024 10:31 PM
புதுடில்லி:“பா.ஜ.,வுடன் கூட்டு வைத்துக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமானோர் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கி வருகிறது,” என, ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம், பா.ஜ.,வுடன் கூட்டுச் சேர்ந்து ஏராளமான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி வருகிறது.
ஆர்.கே.புரம் தொகுதியில் 3,800 வாக்காளர்கள் பெயர்களை நீக்க பா.ஜ.,வினர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். அந்த விண்ணங்களில் உள்ள பெயர்கள் அனைத்துமே ஆம் ஆத்மி கட்சியை வெற்றி பெற வைத்த ஓட்டுச்சாவடிகளைச் சேர்ந்தவை. அந்த வாக்காளர்கள் இன்னும் அதே முகவரிகளில்தான் வசிக்கின்றனர்.
வரும் பிப்ரவரியில் டில்லி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏராளமான வாக்காளர்களின் பெயரை பட்டியலில் இருந்து நீக்க பா.ஜ., முடிவு செய்துள்லது. அதற்கு தேர்தல் ஆணையமும் உடைந்தையாக உள்ளது.
கடந்த வாரம், ஷாதாரா தொகுதியில 11,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்க பா.ஜ., தலைவர் ஒருவர் டில்லி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்திருந்ததை, முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் சுட்டிக்காட்டி இருந்தார்.
நீக்குதல் விண்ணப்பம் கொடுத்துள்ள வாக்காளரை, தேர்தல் ஆணைய அலுவலர்கள் நேரில் சந்தித்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., கடந்த வாரம், 'கடந்த 10 ஆண்டுகளில் டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியா மற்றும் வங்காளதேச அகதிகளை வாக்காளராக சேர்க்க ஆம் ஆத்மி உதவியுள்ளது. சட்டசபைத் தேர்தலில் அவர்களை ஓட்டுப் போட அனுமதிக்கக் கூடாது'என தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
கடந்த 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில், ஆம் ஆத்மி முறையே 67 மற்றும் 62 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.,வும் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றன.