நலிவடைந்தோர் சான்றிதழ் நிறுத்தம் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
நலிவடைந்தோர் சான்றிதழ் நிறுத்தம் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
ADDED : ஏப் 15, 2025 06:48 PM
புதுடில்லி:“பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு சான்றிதழ் வழங்குவதை பா.ஜ., அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிகளில் சீட் வாங்க முடியாமலும், மருத்துவக் காப்பீடு பெற முடியாமலும் சிரமப்படுகின்றனர்,”என, டில்லி ஆம் ஆத்மி தலைவரும், முன்னாள் அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ் கூறினார்.
சவுரவ் பரத்வாஜ், நிருபர்களிடம் கூறியதாவது:
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான சான்றிதழ் வழங்குவதை பா.ஜ., அரசு நிறுத்தி வைத்துள்ளது. தகுதியற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஆய்வு செய்யும் பணி நடப்பதாகவும், அதுவரை வருவாய்த் துறையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான சான்றிதல் வழங்கப்படாது என்றும் முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார்.
அரசின் இந்த முடிவால், பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்காக இ.டபிள்யூ.எஸ்., சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள் தவித்து வருகின்றனர். அதேபோல, அரசு மருத்துவமனைகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகள் தேவைப்படும் நோயாளிகளும் அது கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
சான்றிதழ்கள் உண்மையிலேயே தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தால் அவற்றை வழங்கிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும். அரசின் நிர்வாகக் குறைபாடுகளை மறைக்க பொது மக்கள் தண்டிக்கப்படுகின்றனர்.

